விதவை மூதாட்டி வீட்டு நில ஆக்கிரமிப்புக்கு உடந்தை – மகள்களிடம் அவதூறு பேச்சு: விஜயநாராயணம் இன்ஸ்பெக்டர் மீது புகார்

0
921

நெல்லை மாவட்டம் முனைஞ்சிப்பட்டி அருகே உள்ள வடக்கு இலங்குளத்தைச் சேர்ந்தவர் மரிய பாப்பு. 65 வயது மூதாட்டி, கணவனை இழந்தவர். இவரது வீடு இடிந்து விழும் நிலையில் இருந்ததால் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் உதவி பெற்று புதிதாக கட்டி வந்தார்.

இந்நிலையில் பின் வீட்டுக்காரரான அருள் என்பவர், விஜயநாராயணம் காவல் ஆய்வாளர் அசோகன் ஆதரவுடன் தடுப்புச் சுவர் கட்டி வீட்டு கட்டுமானத்தை தடுப்பதாகவும், இதுகுறித்து புகார் செய்ய போன தன்னையும் தன் தங்கையையும் ஆய்வாளர் அசோகன் அவதூறாகப் பேசி அவமானப்படுத்தியதாகவும் மரிய பாப்புவின் மகள் சேவியர் மலர்விழி நெல்லை டிஐஜியிடம் மனு அளித்தார்.

அதில்,’ சம்பந்தமே இல்லாமல் எங்கள் வீட்டை கட்டக்கூடாது என்று தகர சீட்டால் அடைத்து பின் வீட்டுக்காரர் அருள் என்பவர் தடுத்தார். ஆண் வாரிசு இல்லாத மூதாட்டியான எனது தாயாரிடம் நிலத்தை தனக்கு விற்குமாறு கட்டாயப்படுத்தி, அது முடியாததால் இவ்வாறு வன்முறையில் ஈடுபட்டார்.

பத்திரம், பட்டா ஆதாரங்களுடன் ஒரு தலைமுறையாக வீடு இருக்கும் சொந்த இடத்தில் கட்டுமானப் பணி செய்யக் கூடாது என்று காவல் ஆய்வாளர் அசோகன் எங்களுக்கு உத்தரவிட்டார். என்னை கடுமையாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்த அருளையும் கைது செய்யவில்லை. ஆனால் வழக்கு இருந்தபோதே அவரது மறைமுக ஆதரவுடன் அசோகன் நேரடியாக நின்று எங்கள் வீட்டை சுற்றி தடுப்பு சுவர் அமைத்து விட்டார்.

இதுகுறித்து முறையிடச் சென்ற என்னையும் எனது தங்கையையும் காவல் நிலையத்தில் நிறையபேர் நின்றிருந்த நிலையில் அவதூறாகப் பேசி அவமானப்படுத்தினார். எனவே, அருள், அசோகன் ஆகிய இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here