உலகின் பல்வேறு கண்டங்களில் வாழ்ந்திருந்த மனித இனம் சுமார் 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் 11 இடங்களில் முதன்முதலாக வேளாண்மை செய்ய தொடங்கினார்கள். அவற்றில் ஒன்று தென் இந்தியா என்று ஆய்வாளர்கள் உறுதி செய்துள்ளனர்.
தமிழ்நாட்டில் பயிரிடப்படும் சாகுபடிப் பயிர்களை ஆய்வு செய்த ஆராய்ச்சியாளர்கள், “சிறுதானியங்களான கேழ்வரகு, வரகு, கம்பு, சோளம், தினை, சாமை மற்றும் பயிறு வகைகளான பாசிப் பயிறு, உளுந்து, அவரை போன்றவை தமிழ்நாட்டில்தான் முதன்முதலாக சாகுபடி செய்யப்பட்டு உலகிற்கு வழங்கப்பட்டுள்ளது” என்று உறுதி செய்துள்ளனர். அதேபோன்று, நெற்பயிரும் இங்கேதான் முதன்முதலாகப் பயிரிடப்பட்டது. “அரிசி” என்ற தமிழ்ச் சொல்லே உலகின் அதிக மொழிகளில் ‘நெல்’ தானியத்தை குறிக்கும் சொல்லாக வழங்கி வருகிறது. மேலும், தமிழ்நாட்டின் ‘ஆதிச்சநல்லூரில்’ மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் நெற்பயிர் வரையப்பட்ட பானை ஓடு கண்டறியப்பட்டது. அங்கு, நெல் மற்றும் சிறு தானியங்களின் உமியும் கிடைத்தது. பழனிக்கு அருகிலுள்ள ‘பொருந்தல்’ கிராமத்தில் தோண்டி எடுக்கப்பட்ட முதுமக்கள் தாழியில் சுமார் 2 கிலோ நெல் கிடைத்தது. இந்நெல்மணிகளை ஆய்வு செய்த அமெரிக்க ஆய்வகம் இது, கிறிஸ்துப் பிறப்பதற்கு நான்கு நூற்றாண்டுகளுக்கு முற்பட்டது என்று அறிவித்தது. இதுவே இன்று வரையிலும் கிடைத்துள்ள மிகப் பழமையான தொல்லியல் நெல் சான்று ஆகும். இது, அக்காலத்தில் பழந்தமிழர் சமூகமாய் கூடி வாழ்ந்து, வேளாண்மையில் திறனுடன் ஈடுபட்டிருந்தனர் என்பதை அறிவிக்கிறது.
உலகத் தொழில் அனைத்திலும் உயிர்வாழத் தேவையான முதன்மைத் தொழிலாக வேளாண்மையைப் பழந்தமிழர் போற்றி னர். எனவே,
“சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை” என்றார் வள்ளுவர்.
உணவுப் பொருட்களின் உற்பத்தியைப் பெருக்க புதர்களையும், கரம்புகளையும், காடுகளையும் அழித்து, பண்படுத்தி விளைநிலம் உண்டாக்கினர். அவ்விடங்களில் நீர் நிலைகளை ஏற்படுத்தினர். அங்குக் கோவில்களை அமைத்து, வேளாண் குடிகளை அமர்த்தினர். இவற்றை, காடுகொன்று நாடாக்கி, குளம் தொட்டு வளம் பெருக்கி என்று பதிவு செய்கிறது பட்டினப்பாலை. பண்டைய உழவர்கள் தம் தொழிலில் திறம்பெற்றவர்களாகத் திகழ்ந்தனர். நிலத்தின் தன்மை அறிந்து பயிர் செய்து நாட்டின் வளம் பெருக்கினர். தான் பயிர்செய்யும் நிலத்தின் தன்மையை அறிந்திருப்பவரே சிறந்த உழவர் என்கிறது நான்மணிக்கடிகை.
உழவர்கள் தமக்கு உரிமையுடையதாக எருதுகளை வைத்திருந்தனர். அவ்வாறு வைத்திருப்பவரே உயர்வாகக் கருதப்பட்டார். அவருடைய வேளாண்மை, “ஏருடையான் வேளாண்மை தானினிது” என்று சிறப்பிக்கப்பட்டது. உழவர்கள் எருதுகளைக் கிடைத்தற்கரிய துணைவர்களாகப் போற்றிப் பாதுகாத்தனர். எருதை அரிய பொருள் என்கிறது திரிகடுகம். உழவியல் நுட்பங்களில் முதன்மையானது உழுதல் நுட்பம். ஆழ உழுதல், பலமுறை உழுதல், ஊறிய நிலம் உழுதல், ஆறப்போடுதல், கட்டிகளைக் களைதல், சமன் செய்தல் எனப் பல்வேறு நுட்பங்களைக் காட்டுகின்றன பழந்தமிழ் இலக்கியங்கள்.
வறட்சியான நிலத்தில் மேலோட்டமாக உழுவதால் எந்தப் பயனும் இல்லை. ஆழமாக உழுவதற்கும், விதைப்பதற்கும் ஈரம் தேவை. எனவேதான், ஈர நிலத்தில் உழுது விதைத்தலை நல்லோர் சொல் கேட்பதற்கு ஒப்பாக காட்டுகிறது நாலடியார். எனவே, நல்ல மழை பெய்து, நிலம் ஊறிய காலை வேளையில், நொச்சியின் தழைகளைச் சூடிக்கொண்டு புனங்களில் ஏருழுதனர். ஈரம் காய்வதற்குள் நிலத்தை இவ்விதம் பண்படுத்தப்பட்ட நிலத்தில், தேர்ந்தெடுக்கப்பட்ட நல்ல வித்துகள் விதைக்கப்பட்டன. எப்படிப்பட்ட வறுமை நிலையிலும் விதை தானியங்களைச் சமைத்து உண்டுவிடக்கூடாது என்று அறிவுறுத்துகிறது இனியவை நாற்பது.
விளைநிலம் விரிவாக்கம், நீர்நிலை உருவாக்கம், மண்வளம் பேணுதல், வித்துக்களைத் தேர்ந்தெடுத்தல், பயிருடுதல், பாத்திக்கட்டி நீர்ப்பாய்ச்சுதல், பயிர்ப்பாதுகாப்பு, உரிய நேரத்தில் அறுவடை, தானியங்கள் சேமிப்பு, கருவிகள் மற்றும் எந்திரப் பயன்பாடு என்று வேளாண் மேலாண்மையில் தமிழர்கள் தன்னிகரற்று விளங்கியதை மேற்கண்ட சான்றுகளின்வழி அறிய முடிகிறது.