நீரின்றி அமையாத உலகில், இனி காசின்றி கிடைக்காது தண்ணீர் என்றாகிவிட்டது. நீர், நிலம், காற்று, வானம், நெருப்பு ஆகிய ஐம்பூதங்களும் இன்றி உலகம் இயங்காது என்பதால் அவை எளிதில் கிடைக்கவேண்டியது அவசியமாகிறது.
குறிப்பாக, தூய குடிநீரும் மாசற்ற காற்றும் இந்திய அரசியல் சாசனத்தின் 21ஆவது பிரிவில் வாரும் வாழ்வதற்கான உரிமையின் அடிக்கற்களாக அமைகின்றன.
1998ல் வெளியான ஆசிய மனித உரிமைகள் சாசனம் பிரிவு 7:1, ஒவ்வொரு தனி மனிதரும் வாழ்க்கைக்கான அடிப்படை தேவையை பெறுவதற்கும், சுரண்டல் மற்றும் தவறாகப் பயன்படுத்தபடுவதற்கு எதிரான பாதுகாப்பு பெறவும் உரிமை உடையவர்கள். கல்வி மற்றும் அறிவு பெறவும், உணவு சுத்தமான குடிநீர், மற்றும் வீடு ஆகியன பெறவும், நலமான இருத்தலுக்கான மருத்துவ உதவி பெறவும் நமக்கு உரிமை உண்டு என்கிறது. 
ஐநாவின் பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உரிமைகளுக்கான சர்வதேச உடன்படிக்கை ‘தண்ணீ ர் பொதுச் சொத்து, அது வாழ்வுக்கும் சுகாதாரத்துக்கும் அடிப்படை. கண்ணியமான மனித வாழ்வுக்கு நீரின் மீதான மனித உரிமை தவிர்க்க முடியாது. மேலும், தண்ணீர் மற்ற மனித உரிமைகளைவிட முதன்மையானது’ என்கிறது. ஐநா பொதுச் சபையின் ‘தண்ணீர் அடிப்படை உரிமை’ எனும் தீர்மானத்திற்கு ஆதரவாக 2010ல் இந்தியா வாக்களித்துள்ளது. ஆனால், இன்று அரசாங்கமே குடிநீர் விற்பனையில் ஈடுபட்டு, அதன் மீதான தனது பொறுப்பிலிருந்து விலகிக்கொள்கிறது.
அதற்கேற்ப ஐநாவின் அங்கீகாரம் பெற்ற உலக வங்கி ஆய்வறிக்கை என்ற பெயரில் அழிவறிக்கை வெளியிட்டு ஏழை நாடுகளை வாட்டுகிறது. தண்ணீர் துறையில் சீர்திருத்தம் என்ற பெயரில் நீராதாரங்களை வணிக மயமாக்கி தண்ணீர் பயன்பாட்டை தனியார்மயப் படுத்துவதை அது தொடங்கி வைத்தது. 1992ல் ‘நீராதார மேலாண்மையை மேம்படுத்துவது’ என்னும் ஆய்வு அறிக்கையை வெளியிட்டது.
பொதுச் சேவையாக விநியோகிக்கப்படும் தண்ணீரில் 50{7a0882499a9dac11d1a5e618ecfeec8f2b279bdf1fc3589101913219fc8b42ec} வீணாகிறது அல்லது திருடப்படுகிறது. இதனால்தான் ஏழை எளிய மக்களுக்கு தேவையான தண்ணீரை அவர்களுக்கு அளிக்க முடியவில்லை. ஆகவே தண்ணீர் விநியோகத்தை திறமையாக கையாள தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும் என உலக வங்கி பரிந்துரைக்கிறது. அதுமட்டுமல்ல, அது கடன் வழங்குவதற்கு தண்ணீர் தனியார்மயமாக்கப்பட வேண்டும் என்பது முக்கிய நிபந்தனையாக இருக்கிறது.
உலகமயமதல் என்னும் பயங்கரம் தனியார்மயத்தின் தாய்மடி. அது எதையெல்லாம் விற்று காசாக்கலாம் என்று சூனியம் வைத்த பொருளாதார மூளையுடன் சிந்திக்கிறது. அதன் பிடியில் சிக்கிய நாடுகளை தாய்மையை கூட விற்கும் தரித்திர நிலைக்கு தள்ளுகிறது.
உலக வங்கியின் ஆணைக்கு அடிபணிந்து இந்திய அரசாங்கத்தின் நீர்வளத்துறை அமைச்சகம் 1987ல் தேசிய தண்ணீர்க் கொள்கையை இயற்றியது. இதில் தண்ணீர் பற்றாக்குறையைப் பயனீட்டாளர்களுக்கு உணர்த்தவும், நீர் பயன்பாட்டில் பொருளாதார செயல்பாட்டை ஊக்குவிக்கவும் தண்ணீருக்கு விலை நிர்ணயம் செய்ய வேண்டும் எனச் சொல்கிறது. 2002ம் ஆண்டு அந்த கொள்கை இன்னும் விரிவாக்கப்பட்டது. அது முன்மொழிந்த தேசிய தண்ணீர் கொள்கைப்படி, தண்ணீரை வணிகப் பொருளாக்கி, குடிநீர் சேவையை தனியார்மயமாக்கிய முதல் மாநிலம் கர்நாடகம்.
பொதுத்துறை நிறுவனத்துடன் கூட்டு என்ற ஒப்பந்த அடிபப்டையில் குல்பர்கா, பெல்காம், ஹுப்பள்ளி, தார்வாட் ஆகிய நகரங்களில் பொதுமக்களுக்கு எவ்வித அறிவிப்பும் இன்றி 2005 & 2006ல் தண்ணீர் விநியோகம் வயோலியா என்னும் தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. ஒரு நாளைக்கு ஒரு ரூபாய்க்கு தண்ணீர் என்ற ஆசை வார்த்தை காட்டப்பட்டது.
மைசூரில் 150 ஆண்டுகளுக்கு முன்பு அந்நாட்டு ராணியால் தங்கச்சங்கிலியை விற்று மக்களுக்காக உருவாக்கப்பட்ட வாணிவிலாஸ் தண்ணீர் நிறுவனத்திடமிருந்து ஜஸ்கோ என்னும் டாடா நிறுவனத்துக்கு குடி நீர் விநியோக திட்டம் 148 கோடி ரூபாய் செலவில் மூன்றாண்டுக்கு ஒப்படைக்கப்பட்டது.
உடனடியாக பொதுக் குழாய்கள் அகற்றப்பட்டன. பொது கிணறுகள் மூடப்பட்டன. எல்லா வீடுகளுக்கும், நீரின் பயன்பாட்டை கணக்கிடும் தண்ணீர் மானி (வாட்டர் மீட்டர்) பொருத்தப்பட்டது. ஆண்டுக்காண்டு குடிநீர் கட்டணம் அதிகரிக்கப்பட்டது. இதனால் போராட்டங்கள் நடந்து, இறுதியில் மீண்டும் மைசூர் மாநகராட்சியே குடிநீர் விநியோகத்தை ஏற்றது.
இவ்வாறு குடிநீர் திட்ட உரிமை பெறும் தனியார் நிறுவனங்கள் நிலத்திலிருக்கும் நீர்நிலைகளான குளக், குட்டை, நீர் இயக்கங்களான ஆறு, அருவிகளில் மட்டுமல்ல, வானிலிருந்து வரும் மழையையும் சொந்தம் கொண்டாடுகின்றன.
சட்டீஸ்கர் அரசாங்கம் குடிநீர் விநியோக உரிமை பெற்ற ரேடியஸ் வாட்டர் என்னும் நிறுவனம், சிவ்நாத் என்னும் நதியின் முழு கட்டுப்பாட்டை 23. 6 கிலோ மீட்டருக்கு பெற்றது. மீனவர்களுக்கான மீன்பிடி உரிமை மறுக்கப்பட்டது. விவசாயிகளுக்கான தண்ணீர் பயன்பாடு குறைக்கப்பட்டது. ஆனால், சுற்றியுள்ள தொழில் நிறுவனங்களுக்கு குறைந்த விலையில் தண்ணீர் வழங்கப்பட்டது. இதற்கு எதிரான மக்கள் போராட்டங்களும் தொடர்கிறது.
தேசிய நீர் கொள்கையில் இந்திய அரசு செய்த 2012ஆம் ஆண்டைய திருத்தம், பல்வேறு பயன்பாட்டுக்கான நீர்வளத் திட்டங்களின் ‘திட்டமிடுதல், செயல்படுத்துதல் மற்றும் நிர்வகித்தல்’ போன்றவற்றில் எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் தனியாரின் பங்களிப்பை உறுதி செய்ய மாநில அரசுகளுக்கு வலியுறுத்தியுள்ளது.
வானமும் பூமியும் அதிலுள்ள இயற்கை வளமும் பொதுவில் இருக்கவேண்டியவை. விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் குடிநீரை விலைக்கு விற்கமுடியுமா? அவற்றுடன் சேர்ந்த மனிதன் என்னும் உயிரினத்துக்கு மட்டும் அரசு என்ற ஒன்றால் இந்த பாதகம் இழைக்கப்படுகிறது.
அதன் விளைவாகவே, நடப்பு நிதியாண்டில் குடிநீர் விநியோகம் மூலம் ஆயிரத்து பதினேழு கோடி ரூபாய் வருவாய் ஈட்ட சென்னை குடிநீர் வாரியம் இலக்கு நிர்ணயித்துள்ளது. இதன்படி மக்களிடமிருந்து குடிநீர் வரியாக மட்டுமே ரூ.349 கோடி வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளது. லாரிகள் மூலம் வீடுகள் மற்றும் நிறுவனங்களுக்கு 400 கோடி ரூபாய் அளவுக்கு குடிநீர் விற்பனை செய்யவும் முடிவு செய்துள்ளது. அரசிடமிருந்து 713 கோடி ரூபாய் மானியமாகவும், இதர வருவாயாக 64 கோடி ரூபாய் ஈட்டவும் சென்னை குடிநீர் வாரியம் முடிவு செய்துள்ளது.
ஆண்டுக்கு ரூ.320 கோடி குடிநீர் வரி செலுத்தியும் மக்களுக்கு சீராக தண்ணீர் வழங்க முடியாத நிலையில் வாரியம் உள்ளதாக மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
தண்ணீர் என்பது ஒவ்வொருவருடைய அடிப்படை உரிமை என்பதை தலைகீழாக்கி, இந்திய ரயில்வே துறை முதலில் குடிநீர் விற்பனையில் இறங்கியது. அதையடுத்து 2013 இந்தியாவிலேயே முதல் முறையாக அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் தமிழகம் முழுவதும் “அம்மா குடிநீர்” உற்பத்தி நிலையங்கள் திறக்கப்பட்டு விற்பனை தொடங்கப்பட்டது. ஆம், நியாய விலை குடிநீர் என்று அதற்கு நியாயமும் கற்பிக்கப்பட்டது.

தனியாரால் நமது குடிநீர் திட்டங்கள் உருவாக்கப்படுகின்றன. பிரெஞ்சு நாட்டு பன்னாட்டு நிறுவனமான சூயெஸ் 400 மில்லியன் யூரோ (3200 கோடி ரூபாய்) செலவில் கோவையின் குடிநீர் திட்டத்தை திட்டமிட்டுள்ளது. இது 1, 50, 000 பயனாளிகளுக்கு (பொதுமக்களுக்கு அல்ல) மட்டும் குடிநீர் வழங்கும் திட்டம்.
இந்த சூயெஸ் நிறுவனம் தண்ணீர் வணிகத்தில் 1822 முதல் கொடிகட்டிப் பறக்கிறது. உலகம் முழுக்க 15 கோடி வாடிக்கையாளர்களுக்கு தண்ணீர் விநியோகம் செய்கிறது.
லத்தீன் அமெரிக்க நாடான உருகுவே நாட்டில் நுழைந்த சூயஸ் நிறுவனத்தை வெளியேற்ற அந்நாட்டு மக்கள் பட்ட பாடு கொஞ்சநஞ்சமல்ல. பொது வாக்கெடுப்பு நடத்தி 65 சதவிகித மக்கள் பரிந்துரைத்த பின்னரே அங்கு அரசியலைமைப்பு சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டது.
இந்திய நகரங்களை மேம்படுத்துவது என்ற பெயரில் நடைபெறும் “ஸ்மார்ட் சிட்டி’ இத்திட்டத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் குடிநீர் விநியோகத்திற்கான நவீன கட்டமைப்புகளைத் தனியார் நிறுவனங்கள் ஏற்படுத்துவதும், குடிநீர் விநியோகம் செய்வதும் ஒரு அங்கமாகிறது.
வாகனம் இயங்க டீசலை விலை கொடுத்து வாங்குவது போல் மனிதர்கள் இயங்க குடிநீரை எரிபொருள் போல் விலைக்கு வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இன்றைக்குச் சந்தையில் ஒரு லிட்டர் டீசலின் சராசரி விலை ரூ.60. ஒரு லிட்டர் புட்டி குடிநீரின் விலை சராசரியாக ரூ.20. இது டீசல் விலையை எட்டிப்பிடிக்காது என்று உறுதி கூறமுடியாது.
குடிநீரை விலைக்கு விற்கலாம் என்று அரசே அறிவித்ததால், பன்னாட்டு பெரு நிறுவனங்களோடு, சிறு, சிறு உள்நாட்டு தண்ணீர் விற்பனைஒ நிறுவனஙக்ளும் களமிறங்கிவிட்டன. இதனால், எங்கெங்கு நீருக்கான அறிகுறி தெரிகிறதோ, அங்கெல்லாம் சென்று தண்ணீரை சுரண்டின.
உலகிலேயே நிலத்தடி நீரை அதிகம் உறிஞ்சும் நாடுகளில் இந்தியா முன்னிலையில் இருக்கிறது. கடந்த ஆன்டு நிலத்தடி நீரை திருடுபவர்கள் மீது திருட்டு வழக்குப்பதிவு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனாலும், வருவாய் துறை மேற்பார்வையிலேயே பல இடங்களில் தண்ணீர் திருட்டு நடந்தது.
இதனால் உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கைப் பதிவு செய்தது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மத்திய, மாநில அதிகாரிகள் நேற்று இதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.
தனியார் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் உற்பத்தி மற்றும் விநியோக நிறுவனங்கள் நிலத்தடி நீரை உறிஞ்சுவதற்கு அரசிடமிருந்து தடையில்லாச் சான்று பெற வேண்டும் என்பது தமிழக அரசின் 2014ஆம் ஆண்டைய அரசாணை.
அதை எதிர்த்து 75 தனியார் குடிநீர் உற்பத்தி நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கில்தான் நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், ‘வணிக ரீதியில் தேசத்தின் சொத்தான நிலத்தடி நீரைத் திருடுபவர்கள் மீது திருட்டு வழக்குப்பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தண்ணீரைத் தேவையின்றி வீணடிப்பவர்கள் மீது மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 425ன் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கடுமையான உத்தரவை பிறப்பித்தார்.
இதற்காக தண்ணீர் எடுக்கும் இடங்களில் ‘ப்ளோ மீட்டர்’ பொருத்தவும், வரையறுக்கப்பட்ட அளவைத்தாண்டி தண்ணீர் உறிஞ்சப்படுகிறதா என்பதை பிரத்யேக கண்காணிப்புக் குழு மூலம் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் கண்காணிக்க ஏற்பாடு செய்யவும் அவர் உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவு கடந்தாண்டு பிறப்பிக்கப்பட்டும் இதுவரை அதை நடைமுறைப்படுத்தாத காரணத்தாலேயே தற்போது உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கொன்றை பதிந்துள்ளது.
தற்போது தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் ஒருபக்கம் என்றால் தண்ணீர் திருட்டும் மறுபக்கம் நடந்துகொண்டிருக்கிறது. ஆயிரக்கணக்கான குடிநீர் சுத்திகரிப்பு நிறுவனங்கள் சிறிதும் பெரிதுமாக தோன்றி கிணற்யுகள், ஆழ்குழாய்கள், ஆறுகள், ஏன் கல் குவாரிகளிலிருந்தும் தண்ணீரை ஒட்ட உறிஞ்சுகின்றன. இதனால் கிராமப்புறங்களிலும் குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் திண்டாடுகின்றனர். விவசாயம் பாழாகிவிட்டது.
உள்ளாட்சி அமைப்பிடம் அனுமதி பெற்றே ஆழ்குழாய் அமைக்கவேண்டும். அதற்கு 5 ஆயிரம் ரூபாய் கட்டவேண்டும். 100 மீட்டருக்கு மேல் இடைவெளி இருக்கவேண்டும் என பல விதிமுறைகள் இருந்தாலும், வீட்டுக்கு வீடு, தெருவுக்கு தெரு ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து ஸ்ட்ரா போட்டு நிலத்தின் உயிர் திரவத்தை உறிஞ்சுகின்றனர்.
பேருந்தில் செல்வது அந்தஸ்து குறைவு என்று கடனுக்காவது கார் வாங்குவதுபோல், பொதுக்குழாயில் தண்ணீர் பிடிப்பதை தகுதி குறைபாடாக கருதி வீட்டுக்கு வீடு இணைப்பு கோரிப்பெறுகின்றனர். உள்ளாட்சி அமைப்பினரும் இது பணம் தரும் வாய்ப்பு என்பதால் அவ்வாறே செய்து சராசரியாக ஏழைக்குடியானவனுக்கு கிடைக்கவேண்டிய குடிநீரின் அளவை குறைத்துவிடுகிறார்கள்.
நீர் யாவருக்கும் சொந்தமானது. தனியார் விற்பனைக்கான சரக்காகாது. உயிரமுதமான அதை அனைவரும் சுவைக்க கொடுக்கவேண்டியது கடமை. அதற்கு மாறாகவும், இயற்கையை அழிக்கும் வகையிலும் இன்று நிலத்தின் அழகை சிதைத்து அதன் உதிரத்தை உறிஞ்சுவதுபோல் தண்ணீரை கொள்ளையடிக்கின்றனர்.
நீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரிப்பது பாராட்டுக்குரியது. இவர்கள் முன்பு அறிக்கை சமர்ப்பித்திருக்கும் அதிகாரிகளே இந்த அவலச்சூழலுக்கு காரணம் என்பதை மட்டும் நீதியரசர்கள் ஆழ்மனம் மறந்துவிடக்கூடாது. இந்த வழக்கில் அவர்கள் அளிக்கும் தீர்ப்பு இறுதியாகவும் உறுதியாகவும் இருக்கும் என்பதில் ஐயமில்லை. கோடையின் வெம்மையில் கருகிக்கொண்டிருக்கும் உயிர்கள் வாடி வதங்குமுன்பு பருவ மழையாக அது வந்து பரவசம் ஏற்படுத்தும் என்பதிலும் சந்தேகமில்லை. அதைத்தான் தாகிக்கும் ஆத்மாக்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றன.














