அதிகார அத்துமீறல், ஊழல், முறைகேடுகளில் அரசியல்வாதிகள் கூட ஒருவழியாக சிக்கிக்கொள்கிறார்கள். ஆனால், அவர்களுடன் சேர்ந்து லஞ்சம் சுவைத்த அதிகாரிகள் வேறு வழியில் தப்பிவிடுகின்றனர்.
லாலுவின் வழக்கு உட்பட பல வழக்குகளில் சிலரை தவிர முக்கிய அதிகாரிகள் பொறியில் மாட்டவில்லை. காரணம், சட்டத்தின் சந்து, பொந்துகளை அவர்கள் அறிந்துவைத்துக்கொள்கின்றனர்.
சென்னையில் நேற்று முன்தினம்பேனர் விழுந்து இளம்பெண் பலியான சம்பவத்தையொட்டி, ‘சம்பவத்துக்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என உயர்நீதிமன்ற நீதிபதிகள் கூறியிருந்தும், அதையெல்லாம் வசதியாக மறந்துவிட்டு ஆங்காங்கே இருந்த பேனர்களை அகற்றி போக்கு காட்டுகின்றனர் மாநகராட்சி அதிகாரிகள்.
‘ பேனரை கண்காணிக்க போதிய ஊழியர்கள் இல்லை’ என்று முழுப்பொய்யை நீதிமன்றத்தில் கூறினர். ஆங்காங்கே வசிக்கும், பணிபுரியும் மாநகராட்சி ஊழியர்கள் யாவரும் குருடர்கள் அல்லர். அன்றாடம் அனைவர் கண்களிலும் தென்படும் பேனர்கள் அவர்கள் கண்களுக்கு தப்பப்போவதில்லை.
அதுபற்றி அதிகாரிகளிடம் அவர்கள் தெரிவிக்க வேண்டியதும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டியதுமே நடைமுறை. இதற்காக மாநகராட்சிக்கு ராணுவ பிரிவு, உளவு பிரிவெல்லாம் தேவையில்லை. சுகாதார ஊழியர், சாலை, மின்கம்பம் பராமரிப்பாளர்கள் குடிநீர் வழங்குநர் என தெருக்கள் தோறும் ஊழியர்கள் மாநகராட்சிக்கு உண்டு.
இதையெல்லாம் மறைத்துவிட்டு, நீதிபதியின் உத்தரவையும் நிறைவேற்றாமல் மௌனம் காக்கிறது சென்னை மாநகராட்சி. அதுமட்டுமின்றி, சந்தடி சாக்கில், ரோந்து வாகனம், கைபேசி வசதி என செலவுக்கும் வழிவகுத்து நல்லத்ததனமாக நாடகம் ஆடுகிறது.
மாநகராட்சி அதிகாரிகள், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், வருவாய் துறை, காவல் துறை அதிகாரிகளுக்கு பேனர் விவகாரத்தில் தொடர்பு இருப்பதால் அவர்கள் மீது கட்டாயம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக சேவகர் டிராபிக் ராமசாமி வலியுறுத்தியுள்ளார்.

கடந்த ஆண்டு மெரீனா கடற்கரையை சுத்தப்படுத்தும் பணியை ஆய்வு செய்யும் வகையில் சென்னை மாநகராட்சி ஆணையாளரும், காவல் ஆணையாளரும் 30 நாள்களுக்கு அங்கே நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை அடுத்து சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் கடற்கரையில் நடைபயிற்சி செய்து ஆய்வு செய்தது குறிப்பிடத்தக்கது.













