குலம் காக்கும் தெய்வங்கள் 6

1
2121

நடுகல்லில் தெய்வமாக நிற்கும் வீரன் முன்பு கேடயம், ஈட்டி போன்ற போராயுதங்களை அரண்போல் நிறுத்திவைத்து அழகுபடுத்துவதுண்டு. உவகையேற்றும் உருமி மேளமே நடுகல் தெய்வத்துக்கு விருப்பமானது. எனவே, சிறப்பு செய்யும்போது உருமி மேளம் கொட்டி இசையுடன் பாடி வழிபடுவர்.

போரில் இறந்த வீரன் நாட்டுக்கே பொதுவானவன் ஆகிறான். எனவே, அவனது உற்றாரோ, உறவினரோ அல்லாவிடினும் எல்லோரும் அவனது நடுகல்லை வணங்குவர். காட்டுவழிப் பயணத்திற்கிடையே இயற்கை சீற்றம் ஏற்படாமலிருக்கவும், விலங்குகள் தாக்காமலிருக்கவும் ஊரறியாத வழிப்போக்கர்களும் நடுகற்களை வணங்கிச்செல்வர். பாணர்கள் யாராவது அவ்வ்ழியே சென்றால் யாழிசைத்தோ, பறையொலி எழுப்பியோ நடுகல் முன் நின்று சற்று நேரம் பாடிச்செல்வர்.

வீரமாக போரிட்டு விழுப்புண் பட்டு இறந்தவருக்கு நடுகல் எடுக்காவிட்டால் தன் வாரிசுகளுக்கு துன்பம் நேரிடும் என பயந்தனர். எனவே, அவர்கள் உயிர்நீத்த இடத்திலோ, அருகில் உள்ள நீர் நிலையோரத்திலோ, மரத்தடியிலோ நடுகல் எழுப்பினர்.

போரில் பங்கு கொண்ட வீரர்கள் நடுகல் ஆனது போலவே, துர்க்கையம்மன் முன்பு தன் தலையை தானே பலி தந்த வீரர்களும் நடுகற்களாக, தலையற்ற நவ கண்ட சிற்பங்களாக ஆயினர். கம்பவர்ம பல்லவனுக்கு உற்ற துன்பத்தை ஒழிக்க வேண்டுமென முறையிட்டு பிடாரிக்கு ஒருவன் நவகண்டம் கொடுத்தான்.அவன் குடும்பத்துக்கு நில தானம் வழங்கிய தகவலை அம்மன்னனின் திருவாமூர் கல்வெட்டு தெரிவிக்கிறது.

‘ ஸ்ரீ கம்ப பருமற்கு யாண்டு இருபதாவது
பட்டை பொத்தணுக்கு ஒக்கொண்ட நாகன்
ஒக்கதிந்தன் பட்டைபொத்தன் மேதவன்
புரிந்தாதென்று பிடாரிக்கு நவக் கண்டங்குடுத்து
குன்றகத்தலை அறுத்துப் பிடலிகைமேல்
வைத்தானுக்கு திருவான்முர் ஊரார் வைத்த
பரிசாவது எமூர்ப் பறைகொட்டக் கல்
மெடு செய்தாராவிக்குக் குடுப்பாரானார்
பொத்தனங் கிழவர்களும் தொறுப்பட்டி நிலம்
குடுத்தார்கள் இது கன்றேன்றார் கர்கையிடக்
குமரி இடை எழுநூற்றுக் காதமும் செய்தான்
செய்த பாவித்துப் படுவார் அன்றென்றார்
அன்றாள் கோவுக்கு காற்ப் பொன் றண்டப் படுவார்’ என்பது அந்த கல்வெட்டு வாசகம்.

அய்யனார், மதுரை வீரன், சங்கிலிக் கருப்பன், பாவாடைராயன் போன்றோரும் நடுகல் தெய்வங்களாகவே கருதப்படுகின்றனர். சில வட தமிழக கிராமங்களில் வேடியப்பன், கிருஷ்ணாரப்பன், சாணாரப்பன், கருப்பராயன் என்ற பெயர்களில் நடுகற்களை மக்கள் வழிபட்டு வருகின்றனர். குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியை அடுத்துள்ள கோட்டைக்கரையில் பாண்டிய மன்னன் மாறன் சடையனின் (கி.பி 765-790) படையை சேர்ந்த இரணகீர்த்தி என்ற வீரனின் நடுகல் உள்ளது. இதே குமரி மாவட்டத்தில் கோட்டாற்றில் உள்ள வேம்படிப் பள்ளியில் ஹிஜிரி 1193ல் நடந்த போரில் உயிர் துறந்த ஹித் செய்யது பக்கீர் இபுன் ஸய்யது வலி என்ற வீரரின் கல்லறை உள்ளது. அதன் தலைமாட்டில் உருவிய கட்டாரியும் வாளும் உள்ளது. அதே கட்டாரி கால்மாட்டில் உறையிலிட்டாற்போல் காட்சியளிக்கிறது. இதுவே வீரமுடன் ஆயுதமேந்தி போராடி உயிர் பிரிந்ததால் உறையுள் வாள் போய்விட்டதான சித்தரிப்பு என்கின்றன்ர் ஆய்வாளர்கள்.

நடுகற்கள் ஏற்படுத்த முதன்மையான காரணம் வீரன் சொர்க்கம் செல்வான் என்ற நம்பிக்கை. தாக்குதலுக்காகவன்றி, தற்காப்புக்காகவாவது நாட்டுக்கு நாடு போரை எதிர்கொள்ளவேண்டியிருந்த நிலையில் இவ்வாறு வீரர்களை ஆற்றுப்படுத்துவது அவசியமாயிருந்தது. போரில் மாண்ட வீரர்களை தேவகன்னியர் விண்ணுலகுக்கு அழைத்துச் செல்வது போன்ற சிற்பங்கள் சில நடுகற்களில் உள்ளன.

இறந்துபட்ட வீரனின் மனைவியும் கணவன் இறந்தபின் செய்ய வேண்டிய கடமைகளை செய்து விட்டு தானும் உயிர்விட்டு நடுகல்லாய் மாறியுள்ளாள். இவ்வாறு கணவன் உயிர்துறந்ததும் தீயில் பாய்ந்து உயிர் விட்ட பெண்களுக்கு நடுகல் எடுத்து தீப்பாய்ஞ்சம்மனாக வணங்குவார்கள். ஆண்களுக்கு வீரக்கல் என்றால், பெண்களுக்கு நடுவது சதிக்கல்.

மனிதர்களுக்கு மட்டுமில்லாது விலங்குகளுக்கும் நடுகல் எடுக்கப்பட்டுள்ளது. தக்கோலப் போரில் ஈடுபட்ட தளபதி மனரேல வளர்த்த காளி என்ற நாய் வேட்டையின்போது காட்டுப்பன்றி தாக்கி இறந்தது. அந்த நாய்க்கு சிவாலய வளாகத்துக்குள் நடுகல் எழுப்பி, அதற்கு பூஜை செய்ய நில தான்ம் செய்ததும் வரலாறு. பழனி பெரிய நாயகி அம்மன் கோவில் வெளிப்பிரகாரத்தில் குதிரைக்காக எடுக்கப்பட்ட நடுகல் உள்ளது.

மதுரை வைகை கரையிலிருந்த பாகனூர் என்னும் சோழவந்தான் கூற்றத்தில் (இப்போதைய தாலுகா போன்ற பிரிவு) பொருந்தல் என்னும் தேவேந்திர வல்லபுரத்தில் குன்றாத பெருமாள் என்ற வீரன் வீரக்கொடியார் என்றழைக்கப்பட்ட வணிகக்கூட்டத்துக்கு பாதுகாப்பாக செல்லும் வீரர் குழுவில் இருந்தான். அவன் அவ்வழியாக செல்வோரை பயமுறுத்திய கடுவாய் புலியை கொன்று இறந்துபட்டான். அவனுக்கு புலிக்குத்திக்கல் எடுத்து குடும்பத்துக்கு ஒரு மாவேலி நிலம் வழங்கப்பட்டது.

திருவண்ணாமலை அருகே உள்ள எடுத்தானூர் கிராமத்தில் மகேந்திரவர்மன் காலத்தில் மாடு திருடவந்த கொள்ளையனை தாக்கி இறந்த கருந்தேவகத்தி என்ற வீரனுக்கும், கோயிவன் என்ற அவனது நாய்க்கும் நடுகல் உள்ளது. வீரம் காக்க மடிந்தவர்களுக்கு நடுகல் எடுத்து சிறப்பிப்பதோடு அவர்களின் குடும்பத்துக்கு உதிரப்பட்டி அல்லது ரத்தக்காணி என்ற பெயரில் நிலதானம் செய்வார்கள். மானத்துக்காக தீயில் இறங்கி மடிந்த பெண்ணின் உறவினருக்கு தீப்பாய்ந்த காணி வழங்குவார்கள்.

மன்னர்களுக்கும் நடுகல் உண்டு. அதியமான் நெடுமான் அஞ்சியின் அன்புத்தோழியான அவ்வை, அவன் இறப்பின் பின்பு நடப்பட்ட கல்முன்பு கலயத்தில் கள் வைத்து படைக்கப்பட்ட காட்சியை கண்டு வேதனையில் இவ்வாறு விம்முகிறாள், ‘ காலையும் மாலையும் இனி இல்லாமல் போகட்டும்! என் வாழ் நாட்களும் இனி இல்லாமல் போகட்டும்! உயர்ந்த சிகரங்களையுடைய ஒளிரும் மலை பொருந்திய நாட்டை ஒரு சேரக் கொடுத்தாலும் பெற்றுக் கொள்ளாதவனாகிய அதியமான், தன் நடுகல்லின் மேல் மயிலிறகு சூட்டி, நாரினால் வடிகட்டப்பட்டக் கள்ளைச் சிறிய கலத்தில் கொடுத்தால் ஏற்றுக் கொள்வானோ?’

‘இல்லாகியரோ காலை மாலை
அல்லாகியர் யான் வாழும் நாளே
நடுகற் பீலி சூட்டி நாரரி
சிறுகலத் துகுப்பவும் கொள்வன் கொல்லே’ (புறம் 232)என்பது அவளது

துயரக்குரல்.அதியமான் அஞ்சியைப் போல் இலங்கையை ஆட்சி செய்த எல்லாளனுக்கு துட்டகாமினி நடுகல் வைத்து வழிபட்டதாக மகாவம்சம் கூறுகிறது. பிற்காலத்தில் இவ்வாறு அரச குடும்பத்தினர் வீர மரணம் எய்தினால் அவர்களை அடக்கம் செய்த இடத்தில் பள்ளிப்படை என்னும் நினைவாலயங்களை எழுப்பினர். தக்கோலப்போரில் எதிரியின் அம்பு பாய்ந்து யானையின் அம்பாரியிலேயே உயிர்நீத்த ராஜராஜனின் தாத்தா இராசாதித்யனுக்கு அருகில் பள்ளிப்படை நிறுவப்பட்டது.

முக்கியமான சில வீர்ரர்களின் நடுகற்களை சுற்றிலும் கல் அடுக்கி அதனைப் பதுக்கை ஆக்குவர். அவற்றை ‘வல்லாண் பதுக்கைக் கடவுள்’ என்று கூறி வணங்குவர். நடுகல்லோடு சேர்த்து மயிற்பீலிகளைக் கட்டுவர். உடுக்கு அடிப்பர். தோப்பிக் கள்ளை படைப்பர். பூவும் புகையும் காட்டி சிறப்பு செய்வர். உயிரினங்களைப் பலியிடுவர். இந்தப் பதுக்கைக் கோயில்கள் வழிப்பாதைகள் இணையுமிடத்தில் அமைக்கப்படும்.

ஒரு பாறைக் குன்றின் அருகே ஒரே நடுகல்லில் பல வீரர்கள் பெயர்கள் பொறிக்கப்பட்ட செய்தியும் கிடைக்கிறது. குறிப்பிட்ட போரில் கூட்டமாக மடிந்தோருக்கு இந்த நடுகல் எழுப்பப் பட்டிருக்கலாம். ஈழத்தில் உயிர்நீத்த மாவீரர்களுக்கும் ஒரே இடத்தில் நடுகற்கள் எடுப்பித்தனர்.

நடுகற்களை சற்று வசதி வாய்ந்த மண்டபங்கள், அம்பலங்களில் எடுப்பிக்கவும் செய்தனர். அவ்வாறான மண்டபங்கள், அமம்பலங்கள் பாழ்பட்டு கிடந்த ஊரைக்கண்ட புலவர் ஒருவர், ‘தாம் வசித்த கற்களைவிட்டுத் தெய்வங்கள் நீங்கி விட்டமையால் அம்பலங்கள் பாழடைந்து கிடக்கின்றன’ என்று வருந்துகிறார். (புறம் 52).

உயிர்துறந்த குடும்பத்துப் பெரியவர்களுக்கு அமர்ந்த, நின்ற நிலையில் சமாதி எழுப்பி ஆண்டுதோறும் குருபூஜை நடத்துவதுக், சமாதியடைந்த ஞானிகளுக்கு கோயில் எழுப்பி விழா எடுப்பதும் இந்த நடுகல் வழக்கத்தின் நீட்சியே. திருவாவடுதுறை ஆதீனத்தின் நாஞாவது பட்டத்தாரான உருத்திரகோடி தேசிகருக்கு நின்ற நிலையில் சமாதிக் கோயில் மதுரையில் உள்ளது.

நடுகல்லுடன் தினமும் பேசி தங்கள் துன்பத்தை தீர்த்துக்கொண்டவர்கள் உண்டு. குழந்தை பாக்கியத்துக்கும், குல நன்மைக்கும் நடுகல் வணக்கம் நன்மை பயத்தது. பிற்காலத்தில் இவை பதுக்கை, அம்பலம் என்ற நிலை கடந்து கோயில்களானபோது சாமியாடி வீரனான தெய்வத்தின் ஆவியிடம் பேசி மழை பெய்வது பற்றியும், பகை தீர்வது பற்றியும் வாக்குசொல்லி மகிழ்விப்பார். தங்கள் மண்னில் வாழ்ந்து மடிந்தவர்களுடன் சகஜமாக பேச அவர்களின் வழிவந்தவர்களுக்கு சங்கோஜம் ஏற்படாதல்லவா?

1 COMMENT

  1. நடுகல் வழிபாட்டை நம் மக்கள் இன்றளவும் கொண்டாடிமகிழ்கின்றனர். ஒருவேளை இதுதான் கல்லறைத்திருநாள் என மாறியதோ என்னவோ?குலதெய்வ வழிபாட்டில் நாம் வேறுபாட்டினைக் காண இல்லை. எங்கள் குலதெய்வ வழிபாட்டில் அனைத்து மக்களும் வருவர். பங்குனித்திருநாளன்று அங்கே கூடும் மக்களிடத்து வேறுபாடு இருக்காது. பொங்கலிடுவர், வருகின்ற அனைவருக்கும் அன்றைய நாளில் வயிராற உணவும் படைப்பர்.
    ஆனால்! இன்றைய சூழலில் குலதெய்வ வழிபாட்டிலும் வடமொழி புகுந்துவிட்டதே எனும் போது அங்கே உண்மையான பூசை, பற்று ஏதுமே இருப்பதாகத்தெரிய இல்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here