
அல்-கய்தா நிறுவனர் ஒசாமா பின்லேடனின் மகன் ஹம்சா பின்லேடன் உயிரிழந்துவிட்டதாக அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ளது. ஆனால், அவர் இறந்த இடம் அல்லது தேதி குறித்த விவரங்கள் தெளிவாக இல்லை.
ஹம்சா சிறுவனாக இருந்த போதுதான் இவரது தந்தை ஒசாமா பின்லேடன் இரட்டை கோபுரத் தாக்குதலுக்காக திட்டம் தீட்டினார். அப்போதே அவரது அருகில் இருந்து பயங்கரவாத திட்டங்களை கவனித்து வளர்ந்துள்ளார்.
சுமார் 30 வயதானவராக மதிக்கப்படும் ஹம்சா பின்லேடன் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் மீது தாக்குதல் தொடுக்க அழைப்பு விடுப்பது போன்ற ஒலி மற்றும் காணொளியை வெளியிட்டார். அதையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் ஹம்சாவின் இருப்பிடம் குறித்த தகவல் அளிப்போருக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் பரிசு வழங்கப்படுமென்று அமெரிக்க அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில்தான் இப்போது அவர் உயிரிழந்துவிட்டதாக அறிவித்துள்ளது.











