உத்தர பிரதேசத்தின் உன்னாவ் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமியை 55 வயதான பா.ஜ.க. எம்.எல்.ஏ. குல்தீப் சிங் சென்கார் கடந்த 2017ல் பாலியல் பலாத்காரம் செய்ததாக சிறுமியின் தாய் புகார் கூறினார். ஆனாலும், புகார் விவரம் மூடி மறைக்கப்பட்டது.
முதல்வர், யோகி ஆதித்யநாத் வீட்டின் முன் இந்தக் குடும்பம் தீக்குளிக்க முயன்றதால் இந்த விவகாரம் வெளியே தெரிய வந்தது. இதனிடையில் அந்த சிறுமியின் தந்தை போலீஸ் விசாரணையின்போது அடித்துக் கொல்லப்பட்டார். சிறுமியின் உறவினர்கள் பலரும் கைது செய்யப்பட்டனர்.
பாதிக்கப்பட்டவர்களே மேலும் துன்புறுத்தப்பட்டதால் நாடு முழுவதும் கண்டனக்குரல் எழுந்தது. இதன் காரணமாக எம்.எல்.ஏ. சென்கார் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் ரேபரேலி சிறையில் உள்ள உறவினரை பார்ப்பதற்காக பாதிக்கப்பட்ட பெண் உள்ளிட்டோர் சென்ற கார் மீது லாரி மோதியது. இதில், அந்த பெண்ணின் இரண்டு பெண் உறவினர்கள் உயிரிழந்தனர். பாதிக்கப்பட்ட பெண் மற்றும் வழக்கறிஞர் படுகாயமடைந்தனர்.
இது தொடர்பாக, குல்தீப் சிங் சென்கார் மற்றும் ஒன்பது பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. மேலும் 20 பேர் மீது கிரிமினல் சதி, கொலை முயற்சி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண் கடந்த ஜூலை 12ஆம் தேதி சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கோகோய்க்கு தங்களது உயிருக்கு எம்.எல்.ஏ.வால் ஆபத்து உள்ளதாக ஒரு கடிதம் எழுதினார். ஆனால் இந்த கடிதம் தலைமை நீதிபதி க்கு சென்று சேரவில்லை என்று தெரிகிறது. இந்த தகவலும் வெளியே தெரிய வந்தது. அதன்பின்னரே தலைமை நீதிபதியிடம் கடிதம் வழங்கப்பட்டது.
நாளிதழ் மூலம் இதை அறிந்த தலைமை நீதிபதி அதிர்ச்சி அடைந்தார். எனவே, தனக்கு எழுதப்பட்ட கடிதங்களை தன்னிடம் தாமதமாக வழங்கியது ஏன் என ஒரு வாரத்திற்குள் பதிலளிக்கும்படி சுப்ரீம் கோர்ட் பதிவாளருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Home Uncategorised பாஜக எம்.எல்.ஏ.வால் பாதிக்கப்பட்ட சிறுமியின் கடிதம் தாமதமாக வழங்கியதற்கு தலைமை நீதிபதி கண்டனம்










