நடிகை ஸ்ரீதேவி சிவகாசி அருகே உள்ள மீனம்பட்டில் கடந்த 1963ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 13ம் தேதி பிறந்தார்.
இவரது தந்தை அய்யப்பன், தாயார் ராஜேஸ்வரி. ஸ்ரீதேவியின் குழந்தை நட்சத்திரமாக நம்நாடு, துணைவன் படங்களில் நடித்தார். தமிழை விட தெலுங்கில் அதிக படங்களில் நடித்தார் ஸ்ரீதேவி. இந்தி, கன்னடம், மலையாளம் என 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 1976ம் ஆண்டு பாலசந்தர் இயக்கிய மூன்று முடிச்சு படத்தில் ரஜினி, கமலுடன் இணைந்து நடித்தவர்,
அதன் பிறகும் அவர்களுடன் இணைந்து ஏராளமான படங்களில் நடித்தார். ரஜினியுடன் காயத்ரி, ரஜினி கமலுடன் 16 வயதினிலே, கமலுடன் மூன்றாம் பிறை, சிவகுமாருடன் கவிக்குயில் போன்ற படங்கள் அவரை புகழின் முன்னணி இடத்துக்கு உயர்த்தியது. 1982ம் ஆண்டு பாலுமகேந்திரா இயக்கத்தில் கமலுடன் இணைந்து மனநிலை பாதித்தவர் போல் நடித்த மூன்றாம் பிறை படத்துக்கு சிறந்த நடிகைக்கான தமிழக அரசின் விருது கிடைத்தது.
இந்தியில் 1979ம் ஆண்டு சொல்வா சுவான் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். இந்திக்கு சென்றவர் 1983ம் ஆண்டு ஜிதேந்திரா ஜோடியாக ஹிம்மத்வாலா படத்தில் நடித்தார்.இப்படம் திரைக்கு வந்து சூப்பர் ஹிட்டானது. அன்று முதல் ஸ்ரீதேவி இந்தியில் முன்னணி நடிகைகள் வரிசையில் இடம் பிடித்தார். ஜிதேந்திரா ஸ்ரீதேவி இணைந்து 16 படங்களில் நடித்தனர். இதில் 13 படங்கள் ஹிட்டாக அமைந்தது.
தமிழில் வெளியான மூன்றாம் பிறை இந்தியில் சத்மா பெயரில் ரீமேக் ஆனது. இது ஸ்ரீதேவியின் நடிப்பு பாலிவுட்டினரை மிகவும் கவர்ந்தது. அங்குள்ள பத்திரிகைகள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் என பாராட்டியிருந்தது. ஸ்ரீதேவி நெம்பர் ஒன் நடிகையானார்
கடந்த 1995ம் ஆண்டு இந்தி பட அதிபர் போனிகபூரை ஸ்ரீதேவி மணந்தார். இவர்களுக்கு ஜான்வி, குஷி என இரண்டு மகள்கள் பிறந்தனர். ஜான்வி தற்போது இந்தி படத்தில் நடிகையாக அறிமுகமாகிறார். போனிகபூரை மணந்த பிறகு சில ஆண்டுகள் நடிக்காமல் ஒதுங்கி இருந்த ஸ்ரீதேவி மீண்டும் 2012ம் ஆண்டு இங்லிஷ் விங்லிஷ் படம் மூலம் ரீ என்ட்ரி ஆனார்.
பிறகு 2015ம் ஆண்டு தமிழில் விஜய் நடித்த புலி படத்தில் மந்திரவாதி பெண்ணாக நடித்தார் ஸ்ரீதேவி. தமிழில் இது அவருக்கு கடைசி படமாக அமைந்து விட்டது. பின்னர் பாகுபலி படத்தில் ராஜமவுலி நடிக்க கேட்டபோது மறுத்து விட்டார். அந்த வாய்ப்பு ரம்யாகிருஷ்ணனுக்கு சென்றது.
இந்நிலையில் ஸ்ரீதேவி மறைவு இந்திய திரையலகிற்கு பெரும் இழப்பு என கலைத்துறையினர் வருத்தம் தெரிவித்தனர்












