மந்திர கல் மோசடி: சிறைக்கைதியுடன் கான்பரன்ஸ் கால் போட்டு தொழிலதிபரை மிரட்டிய வக்கீல் மீது வழக்கு

0
605

கோவை புதூர் பகுதியைச் சேர்ந்த லோக்நாத் சிங் என்பவரின் மகன் ஹரி ராம் சிங் என்கிற சந்தோஷ் (36). இவர் பொள்ளாச்சியில் மோட்டார் ஒர்க்ஷாப் நடத்தி வருகிறார்.தொழிலதிபரான இவருக்கு பழங்கால மற்றும் அபூர்வ பொருட்கள் மீது ஆர்வம் உள்ளது. இவரிடம் திண்டுக்கல்லைச் சேர்ந்த ராபர்ட், பாலா ஆகியோர் தங்களிடம் சுலைமான் கல் என்ற மந்திரக்கல் வைத்திருக்கும் பழங்குடி மக்கள் தெரியும். இந்த மந்திரக் கல்லை வைத்திருந்தால் உடலில் ஒரு அபூர்வ சக்தி ஏற்படும். துப்பாக்கியால் சுட்டால் கூட குண்டு உடலில் துளைக்காது என்று கூறியிருக்கின்றனர்.

இந்த கல்லுக்கு உலக அளவில் பல ஆயிரம் கோடி ரூபாய் விலை உள்ளது.கல்லின் விலை சுமார் 4,500 கோடி ரூபாய். ஒரு கோடி ரூபாய் முன்பணமாக கொடுத்தால் அந்த கல்லை பழங்குடி மக்களிடமிருந்து நாம் வாங்கி உலக சந்தையில் விற்று பெரும் பணக்காரர் ஆகிவிடலாம் என்று ஆசை வார்த்தை என்று கூறியுள்ளனர். இதை நம்பிய சந்தோஷ் தனது நண்பர்களிடம் இதைப் பற்றிக் கூறியுள்ளார். இதேபோல திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்த சாந்தி என்பவர் இடமும் இந்த விஷயத்தை கூறி உள்ளனர்.

இதையடுத்து கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இந்த கல்லை வாங்குவதற்காக சாந்தி ஒரு கோடி ரூபாயை தயார் செய்துள்ளார். தொடர்ந்து சாந்தி, ஆறுமுகம், செந்தில்குமார், யாபேஸ் ராஜா, ஜெயராமன், ராபர்ட், பாலா ஆகியோருடன் சந்தோஷ் திண்டுக்கல் மாவட்டத்திற்கு புறப்பட்டுச் சென்றார். அவர்கள் ஒட்டன்சத்திரம் அடுத்த பாச்சலூர் கிராமத்திற்கு அவர்களை அழைத்து சென்றனர். அங்கு வனப்பகுதிக்கு பணத்துடன் சென்ற பொழுது திடீரென மலைவாசிகள் அவர்களை சூழ்ந்து கொண்டு தாக்கி உள்ளனர். இதில் நிலைகுலைந்து போன இந்த கும்பலிடம் இருந்து ஒரு கோடி ரூபாய் பணத்தை மலைவாசிகள் பறித்து சென்றதாக கூறப்படுகிறது.

இதனால் பயந்துபோன கும்பல் அங்கிருந்து தப்பி வந்தனர் .இதுகுறித்து போலீசில் புகார் அளித்தால் தங்களுக்கு பிரச்சனை ஏற்படும் , எனவே எந்த புகாரும் அளிக்க வேண்டாம் என்று கூறி அவரவர் சொந்த ஊருக்கு சென்று விட்டனர்.

இந்நிலையில் கடந்த மாதம் சென்னை புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள கூழை இப்ராகிம் என்கிற இப்ராகிம் என்பவர் செல்போன் மூலம் சந்தோசை அழைத்து பேசியுள்ளார். அப்போது, ‘ சாந்தியிடம் கொடுத்து இருந்த ஒரு கோடி ரூபாய் பணம் என்னுடையது. அந்தப் பணத்தை திருப்பி தர வேண்டியது உன்னுடைய பொறுப்பு. தராவிட்டால் கொலை செய்துவிடுவேன்’ என்று மிரட்டி இருக்கிறார்.பயந்துபோன சந்தோஷ், அழைப்பு வந்த செல்போன் எண்ணை பிளாக் செய்து வைத்தார். இதையடுத்து திண்டுக்கல்லில் இருந்து நளினி என்ற வழக்கறிஞர் சந்தோசை செல்போன் மூலம் அழைத்து கன்பரன்ஸ் கால் மூலம் புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள இப்ராகிம் உடன் பேச வைத்துள்ளார். அப்போது 25 லட்ச ரூபாய் பணம் உடனடியாக தரவேண்டும் என்றும் மிரட்டியுள்ளனர் .இதனால் பயந்து போன சந்தோஷ் இரண்டு லட்ச ரூபாய் கொடுத்துள்ளார்.

சில நாட்கள் கழித்து தொடர்ந்து மிரட்டல் விடுக்கவும் மீண்டும் மூன்றரை லட்ச ரூபாயை சந்தோஷ் கொடுத்துள்ளார். ஆனாலும் தொடர்ந்து திண்டுக்கல் வழக்கறிஞர் நளினியும் கூழை இப்ராஹீமும் செல்போன் மூலம் சந்தோசை அழைத்து மிரட்டி வந்துள்ளனர்.

இதையடுத்து பயந்துபோன சந்தோஷ் நேற்று குனியமுத்தூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here