குலம் காக்கும் தெய்வங்கள் 5

1
2270

‘நட்ட கல்லும் பேசுமோ?’ எனக்கேட்டனர் சித்தர்கள். ஆனால், நடுகல் பேசும் என்பதே தமிழர்களின் நெடுநாள் நம்பிக்கை. இறந்தவர்களின் நினைவாக எடுக்கப்படும் நினைவுக் கல்லே நடுகல். இவற்றை வீரக்கற்கள் என விதந்துரைப்பர். நடுகல் எடுக்கும் வழக்கம் பெருங்கற்காலம் தொட்டே உலகின் பல பகுதிகளிலும் வழக்கிலிருந்துள்ளது. இறந்தோர் யாருக்கும் நடுகல் எடுக்கலாம். ஆனால், வீரச்சாவு அடைந்தவருடைய நடுகல்லே வணங்கப்படும் தகுதியுடையது.

போருக்கு சென்ற வீரன் வெற்றியோடு மீண்டால் கள்ளும் இறைச்சியும் மணக்கும் களியாட்டமான உண்டாட்டு நடத்துவர். எதிரியின் வேல் பட்டு மாண்டால் நடுகல் நட்டு மயிற்பீலி செருகி, மாலையிட்டு வணங்குவர். நடுகல்லை கண்கண்ட தெய்வமாக வணங்கியதை

‘ஒன்னாத் தெய்வர் முன்னின்று விலங்கி
ஒளிறேந்து மருப்பிற் களிறெறிந்து வீழ்ந்தெனக்
கல்லே பரவினல்லது
நெல்லுகுத்துப் பரவும் கடவுளும் இலவே’ என்ற மாங்குடி மருதனார் (புறநானூறு 335) கூற்றால் அறிந்துகொள்ளலாம்.

‘மனம் ஒன்றாத பகைவர் முன்னே அஞ்சாது நின்று, அவர் முன்னேறுவதை தடுத்து, உயர்ந்த தந்தங்களுடைய யானைகளைக் கொன்று, தாமும் விழுப்புண் பட்டு வீழ்ந்து இறந்த வீரரின் நடுகல் அல்லாமல், நெல்லைச் சொரிந்து வழிபடும் கடவுள் வேறில்லை‘ என்பது இதன் பொருள்.

இறந்தவர்கள் தெய்வீக சக்தியை அடைவார்கள். நடுகல் நட்டு வணங்கும்போது அவர்களின் ஆன்மா கல்லில் இறங்கும் என்பது ஆழ்ந்த நம்பிக்கை . அதற்கேற்ப பூஜை, படையல், மந்திர உச்சாடனம் என சில சடங்கு முறைகளை பிற்காலத்தில் ஏற்படுத்திக்கொண்டனர்.

நடுகல் என்றால் ஏதோ கையில் கிடைத்த ஒரு கல்லை எடுத்து நட்டு மாலை போட்டு மரியாதை செய்வதாக கருதிவிட வேண்டாம். நடுகல் நடுவதற்கு காட்சி, கால்கோல், நீர்ப்படை, நடுதல், பெரும்படை, வாழ்த்தல் என ஆறு நிலைகள் உண்டு.

காட்சி என்றால், நடுகல்லுக்குரிய கல்லை மன்னரோ, அதை நிறுவுபவரோ சென்று பார்வையிடவேண்டும். கண்ணகிக்கு சிலை செய்யவும், தன் அன்னைக்கு சிலை செய்யவுமாக சேரன் செங்குட்டுவன் இருமுறை 3000 கல் தூரம் சென்று இமயமலையில் கல் பார்த்தான். தகுந்த பாறைக்கல்லை தேடிப்பிடித்ததும் கால்கோள் செய்தான். அதாவது, தகுந்த முறையில் அதை கொண்டுவந்தான். கண்ணகிக்கு எடுத்துவந்த கல்லை கனக, விசய மன்னர்களின் தலையிலேற்றிக் கொண்டுவந்தான்.

கால்கோளுக்குப்பின் அதை நீரில் மூழ்கவிட்டு தூய்மைப்படுததுவதற்கு நீர்ப்படை என்று பெயர். சேரன் கற்களை கங்கையில் நீராட்டிக் கொண்டுவந்தான். பின்னர் கண்ணகியின் உருவை கல்லில் பதித்து நல்ல நேரம் பார்த்து நட்டான். பின்னர் இலங்கை மன்னன் கஜவாகு போன்றோரை சிறப்புவிருந்தினராக வரவழைத்து விழாவெடுத்தான். இதுவே வீரனின் நடுகல் என்றால் அவனுடைய உருவோடு, பெயரையும் பெருமையையும் அதில் பொறிக்கவேண்டும். நட்டபின் மீண்டும் மங்கல நீராட்டி, மயிற்பீலி சூடி, மலர் மாலை புனைந்து, வாழ்த்தி, வணங்கி விழாவெடுக்கவேண்டும்.

இதைத்தான் சேரமான் பெருமாள் நாயனார் ‘பட்டோர் பெயரும் ஆற்றலும் எழுதி நட்ட கல்லும்‘ என்றார். இப்படி நட்ட கல்லை வணங்கினால் தனக்கு விருந்தும், வீடாளும் கணவருக்கும் நாடாளும் அரசருக்கும் வெற்றியும் கிடைக்கும் என தமிழ்ப்பெண்கள் நம்பினர். நடுகற்களைத் தவறாது வணங்கினால் மழை பெய்து வளம் பெருகும் என்பதும் நம்பிக்கை.நடுகற்களுக்கு நாள்தோறும் தீபதூபம் காட்டிப் பூசைசெய்யும் வழக்கமும் ஏற்பட்டது. இதெல்லம் ஏதோ சம்பிரதாயமாக மட்டும் நடக்கவில்லை. வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டன.

இல்லடு கள்ளின் சில்குடிச் சீறூர்ப்
புடைநடு கல்லின் நாட்பலி யூட்டி
நன்னீராட்டி நெய்நறை கொளீஇய
மங்குல் மாப்புகை மறுகுடன் கமழும்

இல்லடு கள் என்றால், தோப்பி அரிசியிலிருந்து வீடுகளில் காய்ச்சப்படும் கள். அப்படி வீடுகளில் கள் வடிப்போர் ஊரருகே ஊன்றிய நடுகல்லுக்கு விடியற்காலையில் நன்னீராட்டி நெய்விளக்கேற்றிப் படையலைப் படைத்தனர். நெய் விளக்கு ஏற்றியதால் உண்டான புகை மேகம் போல் எழுந்து தெருவே மணத்ததாம். இது புறநானூற்று புகழாரம் (புறம் 329).

கோவலர்களாகிய மழவர் மணி கட்டிய கடிகை வேலைக் கையில் ஏந்தி மாட்டுமந்தைகளை மீட்டுவருவர். அப்போது பகைவர்களால் அம்பெய்து வீழ்த்தப்படும் மழவருக்கு நடுகல் நிறுத்தி வழிபடுவர். உயர்ந்த வேங்கை மரத்தின் பூங்கொத்துக்களைப் பனையோலையில் தொடுத்து, இலைமாலை சூட்டி அந்த நடுகல்லை வணங்குவர். கால்நடைகளை கவரவும், நாட்டு எல்லையை விரிவுபடுத்தவும், பெண்ணின் மானத்தைக் காக்கவும், விலங்குகளிடமிருந்து ஊர்மக்களை பேணவும் உயிர்விட்ட வீரர்கள் நடுகற்களானார்கள். வீரர்களின் தீரச்செயலுக்கேற்ப நடுகற்கள் மானம் காத்தான் கல், ஊர் காத்தான் கல், அறம் காத்தான் கல் என்றும், புலிக்குத்திக்கல், யானைக்குத்திக்கல் என்றும் வெவ்வேறு பயர்களில் அழைக்கப்படும். சமண முனிவர்கள் சமாதியான இடத்திலும் கற்கள் நடபப்ட்டன. அவை நிசீதிகை கற்கள் எனப்பட்டன

1 COMMENT

  1. நடுகல் வழிபாடு என்பது எல்லோரும் ஓரினம் என்பதை அடையாளப்படுத்தும் ஒற்றுமை வழிபாடே ஆகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here