கொரோனா தொற்று பரவல் காரணமாக ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்தசஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சூரசம்ஹார லீலை பக்தர்கள் அனுமதியின்றி உள்திருவிழாவாக நடைபெற்றது.
கோவில் வளாகத்தில் உள்ள திருவாட்சி மண்டபத்தில் கோவில் நிர்வாக அதிகாரிகள் காவல்துறையினர் மற்றும் திருக்கோவில் பணியாளர்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டு நடைபெற்றது.
விழாவின் 5ஆம் நாள் விழாவான நேற்று திங்கட்கிழமை சுப்பிரமணிய சுவாமி கோவர்தனாம்பிகையிடம் சக்தி வேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.பின்னர், விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரம்சம்ஹார லீலை இன்று மாலை திருவாட்சி மண்டபத்தில் மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரையில் பக்தர்கள் அனுமதியின்றி நடைபெற்றது.
சுப்பிரமணியசுவாமி தங்கமயில் வாகனத்திலும், வீரபாகுத்தேவர் வெள்ளைக் குதிரை வாகனத்திலும் எழுந்தருளி கோயில் வளாகத்தில் உள்ள திருவாட்சி மண்டபத்தில் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹார லீலை நடைபெற்றது.
தொடர்ந்து., சுப்பிரமணியசுவாமி தெய்வானை அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்று மாலை மாற்றும் வைபவம் நடைபெற்றது. மாலை 7 மணியளவில் சுவாமி அம்பாளுடன் பூச்சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதிலும் பக்தர்கள் அதிக அளவில் கூடுவதை கட்டுப்படுத்த போலீசார் கோவிலை சுற்றிலும் ரதவீதிகள் மற்றும் கிரிவலப்பாதைகளில் தடுப்புகள் அமைத்து வாகனங்களை நிறுத்தினர்.
கந்தசஷ்டி விழாவின் 7ஆம் நாளான நாளை காலை 8 மணிக்கு மயில் வகனத்தில் சிறிய சட்ட தேரில் தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமி எழுந்தருளி அருள்பாலிக்கிறார். மாலை 3 மணிக்கு மூலவரான சுப்பிரமணியருக்கு தங்ககவசம் சாற்றப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.