குலம் காக்கும் தெய்வங்கள் 4

0
908

ருத்திரன் வழிபாடு சைவமாவதற்கும், மாயோன் வழிபாடு வைணவமாவதற்கும் முன்னரே தோன்றி, தமிழகத்தில் பரவலாக இருந்தது இந்திரன் வழிபாடு. ஊர்தோறும் இந்திரனுக்கு கோயில்கள் இருந்தன. இந்திர வழிபாடே அரசர்களுக்குரிய வழிபாடாகவும் இருந்தது. இவனை ‘வேந்தன்’ என்றே பழந்தமிழர் அழைத்தனர். பிற்காலத்தில் தோன்றிய புராணக் கதைகளில் தான் இவனை இழிவாக புனைந்துரைத்தனர்.

இந்திரன் வழிபாட்டிற்கு இணையாகப் பின்னர் வளர்ந்ததே ஐயனார் வழிபாடு. சமண முனிவர்களான மற்கலி, பூரணர், கணி நந்தாசான் ஆகியோரின் உருவகம்தான் ஐயனார் என்று ஆய்வாளர்கள் பலர் சொன்னாலும், இந்திரனே ஐயனாராக ஆனதாகவும் கூற வழியுள்ளது. இந்திரனுக்கும் ஐயனாருக்கும் வெள்ளை யானையே வாகனம். பின்னாள் சில ஐயனார் வெண்குதிரை ஏறியதுண்டு.

கிபி இரண்டாம் நூற்றாண்டில் நமது ஐவகை நிலத் தெய்வங்களின் வழிபாட்டில் சற்று மாறுதல் ஏற்பட்டாலும், அக்காலத்தில் எழுதப்பட்ட சிலப்பதிகாரத்தில் அந்த வழிபாடுகள் பற்றி சிறப்பாக சொல்லப்பட்டுள்ளது. குன்றக் குரவையில் குறிஞ்சி நிலத் தெய்வமாகிய முருகவேளின் வழிபாட்டையும், ஆய்ச்சியர் குரவையில் முல்லை நிலத் தெய்வமான திருமால் வழிபாட்டையும், இந்திர விழவெடுத்த காதையில் மருதநிலத் தெய்வமான இந்திரன் வழிபாட்டையும், கானல் வரியில் நெய்தல் நிலத் தெய்வமான
வருணன் வழிபாட்டையும், வேட்டுவ வரியில் கொற்றவை வழிபாட்டையும் சிலப்பதிகாரம் விளக்கமாக சொல்கிறது.

அக்காலத்தில் இந்திரன் தேவர்களின் தலைவனாக போற்றப்பட்டார். அந்த தேவர் கோமான் இட்ட ஏவலை செய்த காவல் பூதத்துக்கான பீடிகை (பீடம் ) ஒன்றைப்பற்றி சிலபப்திகாரத்தில் குறிப்பிடப்படுகிறது. அந்த காவல் பூதம் கருப்பண்ணசாமியாக இருக்கலாம் என்பது சிலர் கணிப்பு. ஏனெனில், அதற்கு இறைச்சியுடன் பொங்கல் முதலிய படையல்கள் வைத்ததாக கூறப்படுகிறது. மறவர்கள் அதற்கு அவரை, துவரை போன்ற பயறு வகைகளையும் படைத்து, மலர் தூவி, புகை எழுப்பி வாழ்த்தினராம். சிலர் வில், வேல், வாள், ஈட்டி போன்றவற்றை அந்த பூதம் முன்பு வைத்து வெற்றிவேண்டி வழிபட்டதாகவும் சிலப்பதிகாரம் கூறுகின்றது. இவையெல்லாம் கருப்பண்ண சாமி வழிபாட்டின் அம்சங்கள் என்பதால் குல தெய்வ வழிபாட்டுக் கூறுகள் நமது மரபில் செம்மையாக தோய்ந்துள்ளது தெரியவரும்.

நமது ஐந்து நிலக்கடவுள்களின் வழிபாட்டில் காணப்படும் சடங்குகளே இப்போதும் குல தெய்வக்கோயில் சடங்குகளில் கடைப்பிடிக்கப் படுகின்றன. சங்ககாலத்தில் அகவன் மகள், கட்டுவிச்சி ஆகியோர் குறி சொல்வர். குறத்திகள் வெறியாடுவர். ஆலயங்களாக மரங்கள், மன்றங்களே இருந்தன. அசைவ படையலை தெய்வங்கள் ஏற்றன. மக்களுடன் மக்கள் மொழியில் தெய்வங்கள் பேசின.கள் உண்டாட்டும், இறைச்சி விருந்தும் அனைத்து தெய்வங்களின் விழாக்களின் போதும் இருந்தன. எடுத்துக்காட்டாக, பட்டினப்பாலையில் வருண வழிபாடு பற்றி கூறுகையில்,
‘வெண்கூதாளத்துத் தண்பூங்கோதையர்
சினைச் சுறவின் கோடு நட்டு
மனைச் சேர்த்திய வல்லணங்கினான்
மடற்றாழை மலர்மலிந்தும்
பிணர்ப்பெண்ணைப் பிழிமாந்தியும்
புன்றலை இரும் பரதவர்
பனிதழை மா மகளிரொடு
பாயிரும் பனிக்கடல் வேடஞ் செல்லா
துவவுமடிந்துண்டாடியும்’ (பட்டினப்பாலை 85-& 93)என குறிப்பிடப்படுகிறது.
அதாவது, பரதவர்கள் சுறாமீன் கொம்பை மணலில் நட்டு மலர்மாலை அணிவித்து வணங்கினர். அதில் தெய்வம் ஏறியதாக நம்பினர். பின்னர் பனங்கள்ளையும் நெற்கள்ளையும் அருந்தினர். மீனையும் இறைச்சியையும் கடவுளுக்குப் படைத்தனர்.

அசைவ படையலை தவிர்த்தால் முருக வழிபாடும், கோபாலன் வழிபாடும் அக்மார்க் குல தெய்வ வழிபாடாடாகவே இன்றும் தெரிகிறது. கொற்றவை வழிபாடோ இன்றும் அம்மன், காளி தெய்வ வழிபாடாக அப்படியே தொடர்கிறது. முன்னோர்கள் வாழ்க்கை முறையையும் வழிபாட்டு முறையையும் நாம் முற்றாக கைவிடவில்லை என்ற நீண்ட நிம்மதி நெஞ்சில் பிறக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here