பழங்காலத்தில் தமிழர்களால் வணங்கப்பட்ட மாயோன், சேயோன், வருணன், வேந்தன் (இந்திரன்), கொற்றவை ஆகிய தெய்வங்கள் ஐவகை நிலங்களில் வாழ்ந்த வெவ்வேறு தொழில் செய்த மக்களின் குல தெய்வங்களே. மாயோன் இடையருக்கும், சேயோன் குறவருக்கும், வருணன் மீனவருக்கும், வேந்தன் உழவருக்கும், கொற்றவை மறவர் மற்றும் கள்வர்களுக்கும் குல தெய்வங்கள். பெருந்தெய்வங்கள் எனப்படும் சிவன், விஷ்ணு, பிரம்மா பற்றி முதற்சங்கத்தையொட்டிய காலத்தில் அதிகம் பேச்சில்லை.
மேலே சொன்ன நமது குல தெய்வங்களுக்கான வழிபாடு ஆகமத்தை தழுவியதாக இல்லை. உருவடித்து நிறுத்தி, இசை முழங்க ஆடி, பலி கொடுத்து தன அவர்களை நம் முன்னோர்கள் வணங்கியுள்ளனர்.
மாயோனாகிய மால், கோவர்த்தன மலையை துக்கிப்பிடித்து இந்திரன் வருவித்த பெருமழையிலிருந்து ஆயர்குலத்தவரை காப்பாற்றியவர். அவுணரை வெற்றிகொண்டவர். தற்கால ஜல்லிக்கட்டின் பழந்தமிழ் வடிவமான ஏறு தழுவும் வீர விளையாட்டில் ஈடுபட்ட பின், ஆயர் குலத்தவர்கள் மாலுக்கு நன்றி செலுத்துவர். ஓண நாளில் உதித்தவர் என்பதால், திருவோணத்தன்றும் அவருக்கு ஊர் விழா நடக்கும். அந்நாளில் அவரை போற்றிப்பாடி ஆயர்குலப் பெண்கள் குரவை கூத்தாடினர். போர்க்களத்தில் பெற்ற காய வடுக்களால் வீர அழகு பெற்ற மறவர்கள் அவர்கள் வாழ்ந்த சேரியில் வீர விளையாட்டுகளில் ஈடுபட்டனர்.( மக்கள் சேர்ந்து வாழ்ந்த இடமே சேரி என்பதை தவிர அதற்கு அக்காலத்தில் இழிவொன்றுமில்லை. அப்போது பார்ப்பனச்சேரியும் இருந்தது. )
அடுத்து சேயோனாகிய முருகன் மலையக தலைவனாதலால் அவனுக்கு படைப்பதற்குரிய பொருட்களை காவடியில் சுமந்து, நடை களைப்பு தீர ஆடிப்பாடி சென்றனர். குடும்பத்தில் ஏற்படும் பிரச்னைகளுக்கு தீர்வு சொலவதற்காக பெண்கள் வேலேந்தி வெறியாட்டு (சாமியாட்டம்) ஆடுவர். தமிழரின் வழிபாட்டுமுறையில் மிகவும் பழமையானது இந்த வெறியாட்டுதான். இன்னமும் நமது பழைய வழிபாட்டு முறையில் மிச்சமிருப்பதும் அதுதான். இது மனிதர் மேல் தெய்வம் ஏறும் என்ற நம்பிக்கையால் பிறந்தது. முருகப் பெருமானைப் போற்றியவாறு வேலைக் கையில் ஏந்தி வேலன் வெறியாட்டு ஆடுவார்கள். ஆடுவோர் மேனியில் முருகன் எழுந்தருளி குறை தீர்க்கும் குறிப்புகளை உரைப்பான். அவனுக்கு திணை அரிசியுடன் ஆட்டு மறியை அறுத்த ரத்தத்தை விரவி படைப்பார்கள்.
காதல் நோய் வாட்டும் கன்னியரையும் வேலன் வெறியாட்டு விட்டுவைப்பதில்லை. தலைவனை எண்ணி தலைவி உடல் இளைப்பதை அறியாத தாய் , அதற்கான காரணத்தை குறிசொல்லும் முதுவாய்ப் பெண்டிடம் கேட்பாள். அவர், ‘முல்லைக்கொடியாளை முருகன் அணங்கினான் ’ என்பாள். உடனே, முருகன் சினம் தணிந்து மகள் நலம் பெறவேண்டி தாய் ‘வெறியாட்டு விழா’ நடத்துவாள். இதையடுத்து மனையில் இன்னிசை முழங்கப்படும். விழாவுக்குக் களம் அமைத்து அகன்ற பந்தல் போடுவர்.முருகனாய் நின்று வெறியாடும் பெண்ணுக்கு வெள்ளெருக்கு மாலையும், கடம்பு மாலையும் அணிவிப்பர். அப்பெண் முருகன் பெயரை சொல்லிப் பாடிக்கொண்டு கைகளை உயர்த்தி ஆடுவாள். மறியாட்டை பலி கொடுப்பதோடு அதன் குருதியில் தினையை கலந்து மனையெங்கும் தூவுவாள். இப்படி வெறி ஆடியவர்களைப் பற்றி வெறிபாடிய காமக் கண்ணியார் தன் இரு பாடல்களிலும் விவரிக்கிறார். இத்தகைய வெறியாட்டின் இறுதியில் ஆட்டுக்குட்டியைப் பலி கொடுத்து, அதன் குருதியை தலைவி நெற்றியில் வேலன் பூசுவதுமுண்டு. (குறுந்தொகை 362).
‘வருணன் மேய பெருமணல் உலகம்’ என்பது வருணன் கோயில் கொண்ட கடற்கரை பகுதி. வாரணம் என்ற வடசொல்லுக்கு யானை என்றும், கடல் என்றும் இருவேறு பொருட்களுண்டு. அதனடிப்டையில் கடல் தெய்வம் வருணன் ஆனார்.கடற்கரையில் சுறா மீன் கொம்பை நட்டுவைத்து, அதற்கு மாலையிட்டு அதில் அவர் ஏறியதாக நம்பினர். மீன் இறைச்சியோடு பனங்கள்ளையும் நெற்கள்ளையும் அவருக்கு படைத்தனர். வருணனை முன்னிலைப் படுத்தியே நீர் விழாக்கள் நடந்தன.பாண்டியர் குலத்தவரும், பரத குலத்தில் தலையாயவர்களுமான பழையர்கள் முத்தும் வலம்புரி சங்கும் சொரிந்து வணங்கினர். வருணனை முன்னிலைப் படுத்தியே நீர் விழாக்கள் நடந்தன. இலங்கை, சுமத்ரா போன்ற ஆசிய நாடுகள் பலவற்றில் நீர் விழாக்கள் நிகழ்ந்துள்ளன.
பாலை நிலத்துக்குரிய கொற்றவையை எயினர்களும் வேட்டுவர்களும் வணங்கினர். எயினர் என்போர் பாலை நிலத்துக்குரிய ஆறலைக் கள்வர்கள். அவர்கள் தொழிலில் வெற்றியைக் கொடுப்பவள் கொற்றவை. எயினரைப் போலவே மறவர்களும் கொற்றவையை வணங்கியே வெற்றி முரசு கொட்டினர். போர் முனைக்குச் செல்வதற்கு முன்னால் போர் வீரர் அனைவரும் வெற்றியை நல்க வேண்டி கொற்றவைக்குப் பலி இட்டு வழிபாடு செய்வார்கள். கள்ளைப் படைத்து அதையே போர் வீரர்களுக்கு மன்னன் நேரில் வந்து ஊட்டுவதும் உண்டு. கொற்றவைக்கு போர்க்களத்தில் மட்டுமல்ல, நெற்களத்திலும் ‘களப்பலி’ இட்டுள்ளனர். மிகுந்த விளைச்சலை தந்தமைக்கு செலுத்தும் நன்றி அது.
ஆதிகால கொற்றவையின் தோற்றம் சிவனைப்போலவே இருக்கிறது. நெற்றிக்கண் கொண்டவள். பொன் இழையால் கட்டப்பட்ட வெண்ணிறப் பாம்புக்குட்டி போன்ற நீண்ட சடைமுடி. அச்சடைமுடியிலே பிறைச்சந்திரன் போல காட்டுப் பன்றியின் வளைவான கொம்பு. கழுத்தில் புலிப்பல் தாலி. இடையில் வரிகளும் புள்ளியும் பொருந்திய புலித்தோல் ஆடை. கையிலே வில் என கொற்றவையின் தோற்றம் காட்டப்படுகிறது. இவள் சிங்கக் கொடியும், பசுங்கிளியும் ஏந்தியவள்.
விழாவின்போது பாவை, கிளி, காட்டுக்கோழி, மயில், பந்து, கிழங்கு ஆகியவற்றைக் கொடுத்து, மான் மீது கொற்றவையை உலாவரச் செய்வார்கள். பின்னால் வண்ணக் குழம்பு, சுண்ணப் பொடி, சந்தனம், அவரை, துவரை, எள்ளுருண்டை, இறைச்சியுடன் கூடிய சோற்றைத் தாங்கியபடி பெண்கள் வருவார்கள். வழிப்பறியின் போது கொட்டும் பறை; சூறையாடும்போது ஊதப்படும் சின்னம், கொம்பு, புல்லாங்குழலை தெய்வத்திருமுன்பு இசைப்பார்கள்.
மறவர் குடியிலே பிறந்த சாலினிப் பெண்கள் தெய்வம் ஏறிய நிலையில், ‘ கொற்றவைக்குப் பலி கொடாவிட்டால் மறவரின் மன்றங்கள் பாழ்படும், வழிப்பறி வாய்ப்பு இல்லாமல் செருக்கு அடங்கிவிடும். மறவரின் வில்லுக்கு கொற்றவை வெற்றியைத் தரமாட்டாள். கள் குடித்து மகிழ்ந்து வாழும் வளமான வாழ்வு கிடைக்காது’ என்று பயமுறுத்துவதாக சிலபப்திகாரத்தில் வரிகள் வருகின்றன. திருமுருகாற்றுப்படை, தமிழ்க் கடவுள் முருகனைக் கொற்றவையின் மகனாக கொண்டாடுகிறது. பிற்காலத்தில் கொற்றவையையே துர்க்கையாக, சக்தியாக உருவகித்தனர்