கோவில்பட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் காரில் கடத்திச் செல்லப்பட்ட ரூ.5 லட்சம் மதிப்பிலான 243 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் – அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் உள்பட 2 பேர் கைது – ரூ.2,75,800 ரொக்கப் பணம் மற்றும் கார் பறிமுதல்*
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் தனக்கு நெஞ்சு வலிப்பதாக நாடகமாடியதால் பரபரப்பு – மருத்துவப் பரிசோதனையில் பொய் அம்பலம்
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி நகரில் தேசிய நெடுஞ்சாலை வழியாக தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் கடத்தி வரப்படுவதாக மாவட்டக் காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து, மாவட்ட எஸ்.பி. சிவபிரசாத் உத்தரவின்பேரில், போதைப்பொருள் தடுப்புப் பிரிவு சிறப்புக் காவல்துறையினர் தேசிய நெடுஞ்சாலையில் ரகசியக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, சந்தேகத்திற்கிடமான வகையில் அதிவேகமாகச் சென்ற காரை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு சிறப்புக் காவல்துறையினர் துரத்திச் சென்று, நாலாட்டின்புதூர் அருகே மடக்கிப் பிடித்தனர். தொடர்ந்து, காரில் சோதனை நடத்தியபோது, 20 மூட்டைகளில் 243 கிலோ தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, காரில் இருந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், விருதுநகரில் இருந்து திருநெல்வேலிக்கு புகையிலைப் பொருட்கள் கடத்திச் செல்லப்படுவது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களைக் கடத்தி வந்த நெல்லை திருத்துப் பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி (42) மற்றும் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த அமீர் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
மேலும், அவர்களிடமிருந்து 243 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட கார் மற்றும் ரூ.2,75,800 ரொக்கப் பணம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்து, நாலாட்டின்புதூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து போலீசார் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து, விருதுநகரில் இவர்களுக்குப் புகையிலைப் பொருட்களைக் கொடுத்தது யார்? அவை எங்கிருந்து கொண்டு வரப்படுகின்றன? இதில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில், கைது செய்யப்பட்ட கருப்பசாமி திடீரென தனக்கு நெஞ்சு வலிப்பதாகக் கூறியதால் அதிர்ச்சியடைந்த போலீசார், உடனடியாக அவரை கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவரைப் பரிசோதித்த மருத்துவர், அவருக்கு நெஞ்சுவலி எதுவும் இல்லை என்றும், அவர் நலமாக இருப்பதாகவும் தெரிவித்தார். இதையடுத்து, அவர் நெஞ்சு வலிப்பதாகக் கூறியது நாடகம் என்பது தெரியவந்தது.
தமிழகத்தில் புகையிலைப் பொருட்களுக்கு அரசால் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், வெளிமாநிலங்களில் இருந்து பல்வேறு வழிகளில் புகையிலைப் பொருட்கள் கடத்தி வரப்படுகின்றன.
வெளிமாநிலங்களில் இருந்து கொண்டுவரப்படும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை தேசிய நெடுஞ்சாலை வழியாகக் கடத்தி வருவது மட்டுமின்றி, முக்கிய நகரங்களில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளைச் சோதனைச் சாவடிகளாகப் பயன்படுத்தி, மற்ற பகுதிகளுக்கு புகையிலைப் பொருட்களைக் கைமாற்றி வருவதை இந்தக் கும்பல் வாடிக்கையாகக் கொண்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.














