கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு பெய்த கன மழை மற்றும் தாமிரபரணியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக தூத்துக்குடி மாவட்ட தென்பகுதிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன. பல்வேறு இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டதால் போக்குவரத்து சீர்கெட்டது. மின்சாரம், இணையதள சேவை முடக்கப்பட்டது. இன்னமும் பெரும்பான்மை இடங்களில் அவை மீட்கப்படவில்லை.
இந்நிலையில், ஆத்தூர் பேரூராட்சியில் உள்ள தலைவன் வடலி, ஆவரையூர், குமார பண்ணை, தலைப்பண்ணை, புது நகர் ஆகிய கிராமங்கள் தனித்தனி தீவுகள் ஆகிவிட்டன.
அங்கு இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டதால் மக்கள் வேதனையடைந்தனர். குறிப்பாக, ஒரு வாரமாக அங்கு மின்சாரம் இல்லை. வெள்ள நீரும் வடியவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த தலைவன் வடலி ஊர் பொதுமக்கள் இன்று மாலை ஆத்தூருக்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அங்கு போக்குவரத்து ஸ்தம்பித்தது. இந்நிலையில் அந்த வழியாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், கனிமொழி எம்பி ஆகியோரை மக்கள் முற்றுகையிட்டு ஆக்ரோஷமாக பேசினர். காவல் அதிகாரிகள் தலையிட்டும் அவர்களுடைய கோபத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.இதனால் பரபரப்பு சூழல் உருவானது.
இறுதியாக, நாளைக்குள் மின்சார தடை சரி செய்யப்படும் என்று இருவரும் வாக்களித்ததையடுத்து மக்கள் கலைந்து சென்றனர்.