9 வயது சிறுமியின் வயிற்றிலிருந்து ஒரு கிலோ தலைமுடி அகற்றம்

0
18

திருவனந்தபுரம்: நிம்ஸ் மெடிசிட்டியில் நடைபெற்ற அரிய மற்றும் சிக்கலான அறுவைச் சிகிச்சையில், 9 வயது சிறுமியின் வயிற்றில் இருந்து சுமார் ஒரு கிலோ எடையுள்ள தலைமுடிக் கட்டி அகற்றப்பட்டது. உலகளவில் 100-க்கும் குறைவானோரிடம் மட்டுமே பதிவாகியுள்ள ‘ரபுன்சல் சிண்ட்ரோம்’ (Rapunzel Syndrome) எனப்படும் அரிய பாதிப்பால் சிறுமி அவதிப்பட்டு வந்தார்.

தொடர்ச்சியான வயிற்றுவலி மற்றும் வாந்தி காரணமாக நிம்ஸ் மெடிசிட்டியில் அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு மேற்கொள்ளப்பட்ட அல்ட்ராசவுண்ட் மற்றும் சி.டி. ஸ்கேன் பரிசோதனைகளில் குடலில் கடுமையான அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டது. தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட எண்டோஸ்கோபி பரிசோதனையில், வயிற்றிலும் சிறுகுடலிலும் அதிக அளவில் தலைமுடி தேங்கியிருந்தது தெரியவந்தது.

நிம்ஸ் மெடிசிட்டி குழந்தைகள் அறுவைச் சிகிச்சைப் பிரிவு மூத்த ஆலோசகர் டாக்டர் பிஜு ஐ.ஜி. நாயர் தலைமையிலான மருத்துவக் குழுவினர் சிக்கலான அறுவைச் சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்டு, வயிறு மற்றும் சிறுகுடலில் இருந்த தலைமுடிக் கட்டியை முழுமையாக அகற்றினர்.

மன அழுத்தம் அல்லது பாதுகாப்பின்மை போன்ற காரணங்களால் சில குழந்தைகள் தங்களது தலைமுடியைப் பறித்து விழுங்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதாகவும், அவை செரிமானமாகாமல் பல மாதங்களில் வயிற்றில் தேங்கி ‘ட்ரைக்கோபெசோர்’ (Trichobezoar) எனப்படும் கட்டியாக மாறி குடல் அடைப்பை ஏற்படுத்தக்கூடும் என்றும் டாக்டர் பிஜு ஐ.ஜி. நாயர் தெரிவித்தார்.

அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் சிறுமி முழுமையாக குணமடைந்து, இயல்பாக உணவு உட்கொள்ளத் தொடங்கிய நிலையில், மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here