பாளையங்கோட்டையில் ரோட்டை ஆக்கிரமித்து நிற்கும் டிரான்ஸ்பார்மர் ஒன்று எந்நேரமும் நொறுங்கி விழும் நிலையில் கீறல் விழுந்த கம்பங்களுடன் அதிபயங்கரமாக காட்சியளிக்கிறது.
பாளையங்கோட்டை மார்க்கெட் சீவலப்பேரி சாலையில் அந்தோணியார் கோயில் அருகே 10.6.1987இல் நிறுவப்பட்ட டிரான்ஸ்பார்மர் ஒன்று அப்பட்டமாக சாலையை ஆக்கிரமித்து நிற்கிறது. மிகவும் பரபரப்பான போக்குவரத்து நடக்கும் சாலையின் வளைவில் ஒரு கணம் கவனம் பிசகினாலும் வாகனங்கள் மோதிவிடும் நிலையில் உள்ளது. இதனால் அடிக்கடி அப்பகுதியில் போக்குவரத்து பிரச்சனை ஏற்படுகிறது.
மேலும், டிரான்ஸ்பார்மரை தாங்கியுள்ள இரு சிமெண்ட் கம்பங்களும் மேலிருந்து கீழாக பல்வேறு ஆழமான வெடிப்புகளுடன் எந்த நேரத்திலும் முறிந்தோ நொறுங்கியோ விழும் நிலையில் உள்ளது. அவ்வாறு விழுந்தால் மிகப்பெரிய அசம்பாவிதமும் உயிர் சேதமும் ஏற்பட வாய்ப்புள்ளது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் பலமுறை மின்வாரிய அலுவலர்களிடம் முறையிட்டும் சிறிதும் அக்கறையின்றி இருப்பதனால், பொதுமக்கள் அப்பகுதியில் அச்சத்துடனேயே நடமாடுகின்றனர். இனியாவது அதிகாரிகள் ஆய்வு செய்து டிரான்ஸ்பார்மரை சாலையில் இருந்து அகற்றி ஓரமாகவோ அல்லது பாதுகாப்பான வேறு இடத்திலோ புதிதாக நிறுவி பராமரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றனர்.











