குலம் காக்கும் தெய்வங்கள் 11

0
696

நீலியின் கதைக்கேற்ப, திருவள்ளூர் அருகே சிவனின் பஞ்சசபைகளில் ஒன்றான ரத்தின சபை அமைந்த திருவாலங்காட்டுக்கு அருகிலுள்ள பழையனூரில், சாட்சிபூதேஸ்வரர் கோவில், வேளாளர்கள் தீக்குளித்த இடம் , நீலி குழந்தையை காலால் மிதித்த இடம் எல்லாம் உள்ளது. நீலி கதையின் முடிவில், வேளாளர்கள் 69 பேர் தீக்குளிக்க, ஒருவர் இதையறியாமல் வயலில் வேலை செய்துகொண்டிருந்தார். சம்பவம் நடந்து முடிந்த பிறகு கேள்விப்பட்டு அந்த இடத்திலேயே ஏரின் கொழுமுனையை தன் கழுத்தில் குத்திக்கொண்டு உயிர்துறந்தார் என்பாரும் உண்டு.

திருஞானசம்பந்தர் தம் பதிகத்தில் “முனை நட்பாய் வஞ்சப்படுத் தொருத்தி வாணாள் கொள்ளும் வகைகேட்டு அஞ்சும் பழையனூர்” என்று நீலி கதை நடந்த இடமாக பழையனூரை குறிப்பிடுகிறார். சேக்கிழாரின் பெரிய புராணத்திலும் நீலிக்கதை பற்றிய குறிப்புகளுண்டு.

நாகர்கோவில் பார்வதிபுரத்துக்கு முற்காலத்தில் கள்ளியங்காடு என்ற பெயருண்டு. அங்கு கள்ளியங்காட்டு நீலி என்ற தெய்வத்துக்கு கோயில் உள்ளது. இங்குள்ள நீலி தலக்குளத்தில் ஒரு நிலக்கிழாருக்கு அழகு மகளாகப் பிறந்தாள். தனக்கு இணையான பெருஞ்செல்வந்தனுக்கே அவளை மணமுடித்துக் கொடுக்க தந்தை எண்ணமிட்டிருந்தார். அப்போது பாண்டிய நாட்டிலிருந்து பட்டு விற்கவந்த ஒருவனிடம் அவள் காதல் வயப்பட்டாள்.

அவன் பூம்புகார் நகரத்துப் பெரு வணிகன் என்று தன்னை அறிமுகப்படுத்தியதால் நிலக்கிழாரும் மகளை மணமுடித்துக் கொடுத்தார்.
வீட்டில் சில மாதங்கள் தங்கவைத்த பின்பு மகளையும் சீர்வரிசைகளையும் ஒரு வண்டியில் ஏற்றி வணிகனுடன் அனுப்பிவைத்தார். அவர்கள் பத்மனாபபுரம் வழியாக கள்ளியங்காடு வந்தபோது இரவாகிவிட்டது. பயணக் களைப்படைந்த மனைவியை ஒரு கள்ளிச்செடி நிழலில் படுக்க வைத்துவிட்டு நீர் கொண்டுவருவதாக கூறிச்சென்றான் வணிகன். திரும்பிவந்து பார்த்தபோது அவள் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தாள். உடனே, அருகிலிருந்த பெரிய பாறாங்கல்லைத் தூக்கி அவள் தலையில் போட்டான். மரணத்துடிப்பின்போது அவளின் குழந்தை வெளிவந்தது. தன் குழந்தையை கையால் பற்றிக்கொண்டு ‘‘ நீயே சாட்சி” எனக்கூறி உயிர்விட்டாள். வணிகனாக வந்த கள்வனோ நகைகள், பொருட்களை எடுத்துக்கொண்டு மாட்டு வண்டியில் பாண்டி நாட்டுக்கு சென்றுவிட்டான்.

அதுமுதல் பௌர்ணமி இரவுகளில் இறந்த பெண் தனது குழந்தையுடன் கள்ளியங்காட்டில் நின்று அவ்வழியாக வந்த வணிகர்களிடம் உதவி கேட்பதுபோல் நடித்து, வழியில்,‘ வெற்றிலைக்கு சுண்ணாம்பு கிடைக்குமா?’ என சங்கேத பாஷையில் சயனத்துக்கு அழைத்து, கிறங்கிய வேளையில் அவர்களின் உயிர்களை குடித்துவந்தாள்.

அவளை ஏமாற்றிய கள்வன் கொண்டுசென்ற நகை, பணத்துடன் உண்மையாகவே வணிகனாய் மாறி, புதிதாய் மணந்த பெண்ணுடன் கள்ளியங்காடு வந்தான். அவன் மனைவி. நிறை சூலியாக இருந்தாள். நீலி வழக்கம்போல் கைக்குழந்தையுடன் அவனை வழிமறித்தாள். மேலும், தனது பூர்வீக பெயரை கூறி, அவளது தங்கை என அறிமுகம் செய்துகொண்டாள். அழைத்துவந்த கணவர் அங்கு நிறுத்திச் சென்றதாக நாடகமாடினாள். மெல்ல, மெல்ல அவனுடன் இனிமையாக பேசி தன மடிந்த இடமான கள்ளி மரத்தடிக்கு கூட்டிச்சென்றதும் கள்வனான வணிகன் திடுக்கிட்டான். ஆனாலும், திரும்பிப் போகமுடியாமல் அவனை பிடித்தாள். தலையை உடைத்து மூளையை உண்டாள். உடலைக் கிழித்து உதிரத்தை தலையில் ஊற்றி நீராடினாள். நிணத்தை அள்ளி தன் கூந்தலில் இட்டு நீவி குழல் முடித்தாள். அவன் எலும்புகளை தன் காதில் குழையாக அணிந்தாள். மண்டையோட்டை தோலில் கோர்த்து கழுத்தில் மாலையாக அணிந்தாள்.திருவாலங்காடு அல்லது பழையனூரின் அம்மனை தேவார மூவர் ‘வண்டார் குழலி’ என அழைக்கின்றனர். ‘நீலகேசி’ என்ற சமஸ்கிருத சொல்லும் மங்கையரின் அழகிய கேசக்கற்றையை அடிப்படை பொருளாக கொண்டதே. கொற்றவை/ அணங்கு/ நீலியின் கோவிலாக இருந்த பழையனூர் ஆலயத்தில், உயிருள்ள ஆடு, மாடுகள் பலியிடுவதற்குப் பதிலாக மண்ணால் செய்யப்பட்ட ஆடுகள், எருமைகளை பலியிடலாம் என பிற்கால சமண முனிவர்கள் அறிவுறுத்தினர். அதையடுத்துவந்த சைவ சமயத்தவர் அங்கிருந்த பெண்தெய்வத்தை சிவனின் மனைவி சக்தியாக உயர்த்திக்கொண்டனர். நீலி, நீல கேசியாக, வண்டார் குழலியாக ஒரே உருவகப்பெயரில் வெவ்வேறு தெய்வமாக வணங்கப்பட்டாலும், அடிப்படையில் அவள் தமிழர் உயர் நெறியாம் கற்பில் திளைத்த பத்தினித் தெய்வம் என்பதே உறுதி. பத்தினி வழிபாடு தமிழரின் குல தெய்வ வழிபாடு என்பதை கூறவும் வேண்டுமோ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here