கொரனா பரவலை கருத்தில் கொண்டு தமிழகம் முழுவதும் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்பு நடத்தப்படுகிறது. கோவை போத்தனூரை அடுத்த வெள்ளலூர் பகுதி அரசு மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றும் கணினி அறிவியல் ஆசிரியர் விஜய் ஆனந்த், பதினொன்றாம் வகுப்பு பயிலும் மாணவிகளுக்கு செல்போனில் ஆபாச குறுஞ்செய்தி அனுப்புவதாகவும், வீடியோ காலில் வரச் சொல்வதாகவும், புகைப்படம் அனுப்பினால் மட்டுமே இண்டர்னல் மார்க் தரப்படும் எனக்கூறி மிரட்டுவதாகவும் அப்பள்ளி மாணவ, மாணவிகள் பள்ளி வளாகத்தினுள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து மாணவிகள் கூறியபோது, கடந்த சில நாட்களாகவே கணினி அறிவியல் ஆசிரியர் விஜய் ஆனந்த் மாணவிகளுக்கு தொடர்ந்து ஆபாச குறுஞ்செய்திகள் அனுப்புவதாகவும் இரவு நேரங்களில் வீடியோ கால் வரச்சொல்லி உடைகள் இல்லாமல் வீடியோ மற்றும் போட்டோ அனுப்ப சொல்வதாகவும் குற்றம்சாட்டினர். இது தொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியரிடம் பலமுறை புகார் அளித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் அந்த ஆசிரியருக்கு சாதகமாக செயல்படுவதாகவும் வருந்தினர்.
பள்ளி மாணவர்கள் போராட்டத்தின் காரணமாக காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பள்ளி தலைமை ஆசிரியர், காவல்துறை, பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.













