விருதுநகர் மாவட்டம் திருச்சுழி மெயின் பஜாரில், நாகூர் பிச்சை என்பவர் ஜவுளி கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். தற்போது ஊரடங்கு காரணமாக ஜவுளிக்கடைகள் திறப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. ஆனாலும் நாகூர் பிச்சை தனது ஜவுளிக்கடையை திறந்து வியாபாரம் செய்து வந்தார். இது குறித்து வருவாய்துறை அதிகாரிகள், காவல்துறையினர் நாகூர் பிச்சையை பலமுறை கண்டித்து, கடையை திறக்கக்கூடாது என்று அறிவுரை வழங்கி எச்சரித்து வந்தனர். திருச்சுழி தாசில்தார் முத்துகிருஷ்ணனும் சம்பந்தப்பட்ட ஜவுளிக்கடைக்கு நேரில் சென்று எச்சரிக்கை விடுத்தார். அதிகாரிகளின் எச்சரிக்கையை கண்டு கொள்ளாமல், நாகூர் பிச்சை இன்றும் ஜவுளிக்கடையை திறந்து வியாபாரம் செய்து வந்தார்.
ஊரடங்கு உத்தரவை மதிக்காமல், அரசு உத்தரவை மீறி செயல்பட்ட ஜவுளிக்கடைக்கு சீல் வைக்குமாறு அதிகாரிகள் உத்தரவிட்டனர். தாசில்தார் முத்துகிருஷ்ணன் தலைமையில் வருவாய்துறை அதிகாரிகள், நாகூர் பிச்சையின் ஜவுளிக்கடையை பூட்டி சீல் வைத்தனர்.