தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் சித்திரை தேரோட்டம், சஷ்டி, ஆடிப்பூரம், பிரதோஷம், தேய்பிறை அஷ்டமி உள்ளிட்ட பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், விளாத்திகுளத்தைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழக பெண் நிர்வாகி தேவி என்பவர், கடந்த 1-ந் தேதி தனது பிறந்தநாளையொட்டி கோவிலுக்கு சென்றதாக கூறப்படுகிறது.
அப்போது கையில் தேங்காய், பழக்கூடையுடன் கோவில் பிரகாரத்தில் உள்ள பல்வேறு சன்னதிகளுக்கு சென்று, செல்போன் மூலம் வீடியோ பதிவு செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் அந்த காட்சிகளை ரீல்ஸ் வீடியோவாக தொகுத்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டதாகவும் தெரிகிறது.
அறிவிப்பு பலகை இருந்தும்…
கோவில் வளாகத்தில் பக்தர்கள் செல்போன் மற்றும் கேமரா மூலம் புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கக்கூடாது என கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், கோவில் வளாகத்திற்குள் ரீல்ஸ் வீடியோ எடுக்கப்பட்டதாக கூறப்படும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியதால், இதுகுறித்து ஆன்மிக ஆர்வலர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, இந்த வீடியோ தொடர்பாக கோவில் செயல் அலுவலர் உமா மகேஸ்வரி, விளாத்திகுளம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகவும், உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
கோவில் வளாகத்தில் செல்போன் மூலம் வீடியோ மற்றும் ரீல்ஸ் எடுப்பது தொடர்பாக ஏற்கனவே அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள இந்த சம்பவம் விளாத்திகுளம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.














