உலக டி20க்கான இந்திய அணியைத் தயார் செய்ய தோனியே தங்களுக்கு அவகாசம் அளித்ததாக பிசிசிஐ அணித்தேர்வாளர் ஒருவர் அவருக்கு முட்டுக் கொடுத்ததாக நேற்று ஐ.ஏ.என்.எஸ் செய்தி ஒன்று வெளியான நிலையில் கங்குலி இந்தக் கருத்தைத் தெரிவித்திருப்பது கவனிக்கத்தக்கது.
“இல்லை, அவர் (தோனி) தெ.ஆ.வுக்கு எதிரான டி20 தொடரில் தேர்வு செய்யப்படுவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. மே.இ.தீவுகளுக்கு எதிரான டி20 அணியை பார்க்கும்போதே ரிஷப் பந்த்துக்கு வாய்ப்புகள் வழங்க அணி நிர்வாகம் முடிவெடுத்துள்ளது தெரிகிறதே. பந்த்துடன் தொடரவே விரும்புகின்றனர், இது சரியான முடிவும் கூட. ஏனெனில் தோனி இளம் வீரராக அணியில் நுழைந்த போது அவருக்கும் இதே போன்று வாய்ப்புகள் வழங்கப்பட்டது.
என்னைப் பொறுத்தவரை தோனியிடம் விராட் கோலி என்ன சொல்லப்போகிறார் என்பதே முக்கியம். தோனியிடம் அவர் எதிர்பார்ப்பது என்ன என்பதைக் கூறுவது கடினம். ஆனால் யாரும் உடனடியாக தோனியின் ஓய்வு பற்றியெல்லாம் கருத்து கூறிவிட முடியாது.
தோனி, அணி நிர்வாகம், தேர்வுக்குழுவினர் இடையே என்னமாதிரியான உரையாடல்கள் நடக்கின்றன என்பது பற்றி எனக்குத் தெரியாது. நான் அந்த விவாதங்களிலிருந்து தொலைவில் இருக்கிறேன்.
ஒவ்வொரு விளையாட்டு வீரருக்கும் ஒரு காலக்கட்டம் வரும், அது மாரடோனா, சாம்பிராஸ் அல்லது டெண்டுல்கர், தோனி என்று யாராக இருந்தாலும் சரி. இந்த வயதை எட்டும்போது இத்தகைய சூழ்நிலை அவர்களை வந்தடையும்.
விராட் கோலியும் அணி நிர்வாகமும் தோனி வந்து மீண்டும் ஆட வேண்டும் என்று முடிவெடுத்தால் அவர் வந்து ஆடலாம். இல்லை முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்று நினைத்தால் முன்னோக்கிச் செல்வார்கள். இதில் அணித்தேர்வாளர்களும் முக்கியப் பங்கு வகிப்பார்கள்.
ரிஷப் பந்த் அடுத்த 3-4 ஆண்டுகளில் தோனியாகி விட முடியாது, எம்.எஸ். தோனி இன்றைய எம்.எஸ்.தோனியாவதற்கு 15 ஆண்டுகாலம் ஆகியுள்ளது. இந்திய கிரிக்கெட்டில் ஒரு சிறப்பு வாய்ந்த தனிப்பிறவி தோனி.
ஆனால் ரிஷப் பந்த் முதல் டெஸ்ட் போட்டியில் சொதப்பி விட்டார் என்பதற்காக அடுத்த போட்டியில் இருப்பாரா என்று சிலர் எழுதுவதைப் பார்க்கிறேன், ஆனால் நான் கூறுகிறேன் இவர்தான் இதற்கு முன் கடந்த தொடரின் கடைசி டெஸ்ட்டில் சதம் எடுத்தவர். இவரும் ஒரு ஸ்பெஷல்தன ஆனால் தோனியுடன் ஒப்பிடமாட்டேன்.
விருத்திமான் சஹா தன் வாய்ப்புக்காக காத்திருப்பார், இங்கு வயது ஒரு பிரச்சினையல்ல. ” என்றார் கங்குலி.











