*
தென்காசி மாவட்டத்தின் முதல் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றிய சுகுண சிங் மயிலாடுதுறைக்கு மாற்றப்பட்டதை அடுத்து தென்காசி மாவட்டத்திற்கு புதிய காவல் கண்காணிப்பாளராக கிருஷ்ணராஜ் இன்று பொறுப்பேற்றார்.
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தை சேர்ந்த இவர், 2015 ஆம் ஆண்டு இந்திய காவல் பணியில் சேர்ந்து, காஞ்சிபுரம் மற்றும் தேவகோட்டை உட்கோட்டங்களில் உதவி காவல் கண்காணிப்பாளர்(ASP) ஆகவும். பின்னர் பதவி உயர்வு பெற்று சென்னை பெருநகர காவல் துறையில் சென்னை வடக்கு போக்குவரத்து காவல் துணை ஆணையர்(DCP) ஆகவும், திருவல்லிக்கேணி மற்றும் மாதாவரத்தில் காவல் துணை ஆணையராகவும்(DCP) பணியாற்றியுள்ளார்.
புதிதாக பொறுப்பேற்றதும் செய்தியாளர்களிடம் பேசியவர், ’இன்றைய கொரோனா சூழலில் , காவல் நிலையம் சென்று புகார் அளிக்க முடியாதவர்கள், எனது நேரடி கண்காணிப்பில் செயப்படும் இயங்கும் 9385678039 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு புகாரை தெரிவித்தால், *மக்களை நோக்கி தென்காசி மாவட்ட காவல்துறை’ என்ற திட்டத்தின் மூலம் காவல்துறையினர் இருப்பிடத்திற்கே வந்து புகார் மனு மீது விசாரணை நடத்தி தீர்வு வழங்குவர்.
அதாவது, புகார் கொடுத்தவுடன், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் எழுத்தர் நேரடியாக புகார்தாரரின் வீட்டுக்கே சென்று விசாரிப்பார்கள். இது தொடர்பாக உடனடியாக அங்கு வைத்தே சி.எஸ்.ஆர். பதிவு செய்யப்பட்டு அதற்கான எண்ணும் வழங்கப்படும்.புகார்கள் குறித்து காவல் நிலையங்களில் சரியான முடிவு எடுக்காவிட்டாலோ, போலீஸ்காரர்கள் சரியான பதில் அளிக்காவிட்டால் மக்கள் தொடர்பு கொள்ள 93856 78039 என்ற தனி செல்போன் எண் ஒன்றை அறிமுகம் செய்கிறோம். முதல் அமைச்சரின் தனிப்பிரிவு தொலைபேசி எண் போல, இது மாவட்ட கண்காணிப்பாளரின் தனிப்பிரிவு எண்ணாக செயல்படும். எனது அலுவலத்தில் இதை ஒருவர் கண்காணிப்பார். இதில் மக்கள் தங்கள் புகார்களுக்கு நடவடிக்கை எடுக்காதது பற்றி மட்டும் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று மட்டுமல்ல, உங்கள் ஊரில் நடக்கும் பிற பிரச்சினைகள் குறித்தும் தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவர்களின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்.
தற்போது கொரோனா ஊரடங்கு அமலில் இருப்பதால், மாவட்ட கலெக்டருடன் இணைந்து அவர் அறிவிக்கும் அறிவிப்புகளையும், மக்களை பாதுகாப்பதில் காவல்துறையினர் ஈடுபடுவோம். மேலும், மாவட்டத்தில் அதிக இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும், இதனால் வாகன போக்குவரத்தை சீர்படுத்தவும், குற்றங்களை குறைக்கவும் முடியும். குழந்தைகள் மற்றும் பெண்கள் நலன் பாதுகாப்பில் எந்தவித சமரசமும் இல்லாமல், உடனடியாக நடவடிக்கை எடுக்க அனைத்து காவல் நிலையங்களுக்கும் அறிவுறுத்தப்படும்’ என்றார்.












