சென்னை கோவை சேலம் உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் தொழில் செய்யும் சாத்தான்குளம் திசையன்விளை வட்டாரத்தினர் ரயிலிலோ பஸ்ஸிலோ அதிகாலையில் அங்கிருந்து வந்து தங்கள் சொந்த ஊருக்கு செல்வதென்றால் ஒரே வாய்ப்பு திருநெல்வேலியில் இருந்து அதிகாலை நான்கு முப்பது மணிக்கு புறப்படும் கூட்டம் அரசு பஸ்.
பொழுது விடிவதற்குள் வீட்டுக்கு போய் கண் வெளிச்சத்தில் சொந்தம் சுற்றத்தை பார்த்து விடலாம் என்பதனால் இந்த பஸ்ஸை அப்பகுதி மக்கள் மிகவும் கொண்டாடுவர்.
அதேபோல், முன்தின நாள் ஏதாவது வேலையாக திருநெல்வேலிக்கு வந்து ராத்தங்கும் நிலை ஏற்பட்டால், இந்த பஸ்ஸில் ஏறி ‘பொல பொல’வென்று விடிவதற்குள் ஊருக்கு போய் சேர்ந்து விடலாம்.
இவ்வாறு திசையன்விளை சாத்தான்குளம் இரு பகுதி மக்களுக்கும் முக்கியமான கூட்டம் பஸ் அதரப் பழசாகவே இன்னமும் ஓடிக் கொண்டிருப்பதால் அடிக்கடி மக்கர் பண்ணி மக்களை நடுவழியில் நிறுத்தி விடுகிறது.
இப்படித்தான் நெல்லையில் இருந்து குட்டம் நோக்கி சென்ற அந்த அரசு பேருந்து நேற்று மூலைக்கரைப்பட்டி அருகே வந்தபோது திடீரென பழுதாகி நின்றது. இதனால் அங்கேயே நிறுத்தப்பட்டது. தொடர்ந்து பேருந்து செல்ல முடியாததால் ஒரு மணி நேரத்துக்கு மேல் பயணிகள் காத்திருக்க நேரிட்டது.
பின்னர், ஒரு மணி நேரத்துக்கு பின்பு வந்த 137 பேருந்தில் பயணிகளை அனுப்பி வைத்தனர்.
அந்தப் பேருந்து திசையன்விளை, குட்டத்துக்கு போகாது என்பதனால் அந்தப் பகுதியின் பயணிகள் சாத்தான்குளத்தில் இறங்கி அங்கிருந்து வேறு, வேறு வாகனங்கள் மூலம் ஊருக்கு சென்றனர்.
சிக்கலான நேரத்தில் பயணிக்கும் முக்கியத்துவம் வாய்ந்த இது போன்ற வழித்தடத்தில் புதிய பேருந்துகளை இயக்கினால் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதே அப்பகுதியினர் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது








