டோக்கியோவில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகிறது. இதில் இந்தியா சார்பில் உயரம் தாண்டுதல் போட்டியில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு பங்கேற்றார். 26 வயதான இவர் 1.86 மீட்டர் உயரம் தாண்டி வெள்ளி பதக்கம் வென்றார்.
தமிழகத்திலிருந்து சென்ற மாரியப்பன் தங்கவேலு பதக்கம் வென்றது தமிழக மக்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. கடந்த 2016ம் ஆண்டு செனீரோவில் நடந்த பாரா ஒலிம்பிக் போட்டியில் மாரியப்பன் தங்கவேலு தங்கப்பதக்கம் வென்று இருந்தார். இப்போது இரண்டாவது முறையாக அவர் பதக்கம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. பதக்கம் வென்ற அவருக்கு பாரா ஒலிம்பிக் சங்கத்தின் தமிழக தலைவர் இன்ஜினியர் சந்திரசேகர் வாழ்த்து மற்றும் பாராட்டு தெரிவித்துள்ளார்.
சந்திரசேகர் கூறுகையில்,” பாரா ஒலிம்பிக் சங்கத்தின் சார்பில் சில மாதம் முன் சென்னை, கோவை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் திறமையான வீரர்கள் கண்டறியப்பட்டு கடுமையான பயிற்சிகள் வழங்கப்பட்டது. தமிழக மக்களின் எதிர்பார்ப்பின் படி நீளம் தாண்டுதலில் மாரியப்பன் தங்கவேலு மீண்டும் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். கடுமையான பயிற்சியின் மூலம் அவருக்கு வெற்றி சாத்தியமாகியுள்ளது. பாரா ஒலிம்பிக் சங்கம் மாற்றுத் திறனாளிகளுக்கு தேவையான உதவிகளை செய்து தர தயாராக இருக்கிறது. வருங்காலத்தில் மாற்றுத்திறன் வீரர்கள் அதிக போட்டிகளில் பங்கேற்கும் வகையில் பயிற்சிகள் வழங்கப்படும்,” என்றார்