விவசாயியிடம் 5000 லஞ்சம்: மின்வாரிய லைன் மேன் கைது

0
273

கடையநல்லூரில் ரூ.5,000 லஞ்சம் வாங்கிய மின்வாரிய லைன்மேன் கைது
செய்யப்பட்டுள்ளார். ரூ.1½ லட்சம் அபராதம் விதிக்கப்படும் என மிரட்டி பணம் கேட்டதாக அவர் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே விவசாயியிடம் ரூ.5,000 லஞ்சம் வாங்கியதாக மின்வாரிய லைன்மேன் கையும் களவுமாக கைது செய்யப்பட்டார்.
திரிகூடபுரம் பகுதியைச் சேர்ந்த சுந்தரபாண்டியன் மகன் முருகேசன் (42), தனது தந்தையின் பெயரில் உள்ள 6½ ஏக்கர் நிலத்தில் தென்னை விவசாயம் செய்து வருகிறார். அந்த நிலத்திற்கு இலவச மின் இணைப்பு பெற்றுள்ள நிலையில், 2 பேஸ் மற்றும் 3 பேஸ் மின்சாரம் மாறி மாறி வரும்போது கண்டன்சர் பொருத்தி மோட்டாரை இயக்கி வந்ததாக கூறப்படுகிறது.
இதனை கடையநல்லூர் மின்வாரிய உதவி பொறியாளர் அலுவலகத்தில் பணிபுரியும் லைன்மேன் விஜய் (39) நேரில் பார்த்ததாக கூறப்படுகிறது. இதனை புகைப்படம் எடுத்து மின்வாரிய ஸ்குவாட் அதிகாரிகளுக்கு அனுப்பினால் ரூ.1½ லட்சம் அபராதம் விதிக்கப்படும் என முருகேசனை மிரட்டியுள்ளார்.


மேலும், தனக்கு ரூ.25,000 கொடுத்தால் ஸ்குவாட் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்காமல் பார்த்துக் கொள்வதாக விஜய் கூறியதாக தெரிகிறது. யானைகள் தென்னை மரங்களை சேதப்படுத்தியதால் பணம் இல்லை என முருகேசன் தெரிவித்த போதிலும், குறைந்தபட்சம் ரூ.5,000 தர வேண்டும் என விஜய் தொடர்ந்து தொலைபேசியில் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
லஞ்சம் கொடுக்க விரும்பாத முருகேசன், இதுகுறித்து கடந்த 02.09.2026 அன்று தென்காசி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரசாயனம் தடவிய ரூ.5,000 பணத்தை முருகேசனிடம் கொடுத்து அனுப்பினர்.


அதன்படி, இன்று அந்த பணத்தை லைன்மேன் விஜய் பெற்றபோது, அங்கு மறைந்திருந்த தென்காசி லஞ்ச ஒழிப்புத்துறை துணை காவல் கண்காணிப்பாளர் . பால்சுதிர் தலைமையிலான போலீசார் விஜயை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here