மகாராஷ்டிரா சட்டமன்றம் 288 உறுப்பினர்களை கொண்டது. இதில் 56 இடம் கொண்ட சிவசேனா ஆட்சி அமைக்க தீவிரம் காட்டி வருகிறது. பரதீய ஜனதாவிடம் பாதிக்கால முதல்வர் பதவி கேட்டு பலனளிக்காததால் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க காய் நகர்த்தி வருகிறது.
மூன்று கட்சிகளூக்கும் பொதுவான குறைந்த பட்ச செயல்திட்டத்தை உருவாக்குவதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆளுநரை சந்திக்க நேரம் கேட்டும் சந்திக்க முடியாமல் போனது.
ஏற்கனவே சிவசேனாவிடம் ஒரு சுற்று பேச்சு வார்த்தையை முடித்துவிட்ட நிலையில், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் சோனியாவை இன்று மாலை சந்தித்தார். முன்னதாக‘ 170 உறுபினர்களின் ஆதரவுடன் சிவசேனா ஆட்சி அமைக்கும்’ என்று சிவசேனாவின் செய்தி தொடர்பாளர் சஞ்சய் ராவத் உறுதிபட தெரிவித்தார்.
இதுகுறித்து, 10, ஜன்பத் சாலை வீட்டில் சோனியாவை சந்தித்தபின்பு நிருபர்களை சந்தித்த சரத் பவாரிடம் கேட்டபோது, ‘ எவ்வாறு அப்படி சொன்னார்கள் என்று தெரியாது. அந்த எண்ணிக்கை பற்றி சிவசேனாவிடம் தான் கேட்கவேண்டும்’ என பதில் அளித்தார். மேலும், காங்கிரஸ் இன்னமும் கூட்டாட்சிக்கு தயாரில்லை என்பதை ‘ முடிவெடுக்க 60 நாட்கள் அவகாசம் இருக்கிறது’ என்று அவர் கூறியது தெளிவுபடுத்தியது.
‘மகாராஷ்டிராவில் உள்ள அரசியல் சூழலையும் எண்ணிக்கையையும் பற்றியே விவாதித்தோம். தேர்தலில் பாஜகவும் சிவசேனாவும் சேர்ந்து போட்டியிட்டன. நாங்களும் காங்கிரசும் சேர்ந்து போட்டியிட்டோம். அவர்கள் தங்கள் பாதையை தேர்ந்தெடுக்கலாம், நாங்கள் எங்கள் அரசியலை நடத்தலாம்’ என்றும் சரத் பவார் கூறினார்.
ஆக, இப்போதைக்கு மகாராஷ்டிராவில் மக்கள் ஆட்சி இல்லை, ஆளுநர் ஆட்சிதான்.














