தமிழ்நாடு முதல்வர் விஜயை வருங்கால இந்திய பிரதமர் என்று தவெக வினர் பெருமை பேச, காங்கிரஸ் வட்டாரத்தில் ‘ கப, கப ‘ வென புகைச்சல் கிளம்புகிறது.
கன்னியாகுமரி மாவட்டம் ராமன் துறை பகுதியைச் சேர்ந்த ஜார்ஜ் ராபின்சன், மீனவர் அணி மாநில தலைவர், காங்கிரஸ் கட்சி மாநில பொதுச் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை காங்கிரஸ் கட்சியில் வகித்து வந்தார். தற்போது மேலிடம் இவரை காங்கிரஸ் கட்சி மேற்கு மாவட்ட தலைவராக நியமனம் செய்துள்ளது. அதற்கான பதவியேற்பு விழா மார்த்தாண்டம் ஒய். எம்.சி. ஏ வளாகம் திறந்த மைதானத்தில் வைத்து நடைபெற்றது.
இதில் மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார், கன்னியாகுமரி பாராளுமன்ற விஜய்வசந்த், விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் பிரவின், முன்னாள் குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ், கிழக்கு மாவட்ட தலைவர் லாரன்ஸ் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர் .
நிகழ்ச்சியில் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் பேசிய போது, கட்சி கட்டுப்பாடுகளைப் பற்றி பேசிவிட்டு, மறக்காமல் , நாம் ராகுல் காந்தி அவர்களை பிரதமராக கொண்டு வந்தாக வேண்டும், மோடியை நேருக்கு நேர் சந்தித்து கேள்வி கேட்பதால் அவர்கள் அவைக்கு வருவதே இல்லை” என்று பேசினார்.

தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார் பேசுகையில், “
தவெக-வினர் இன்றைய தமிழக முதல்வர் – நாளைய இந்தியாவின் பிரதமர் என கூறுகின்றனர். இதுகுறித்து என்னிடம் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் கேட்கும்போது நான் தெளிவாக பதில் கூறுகிறேன். எங்களுடைய தலைவர் ராகுல் காந்தி அவர் வருகின்ற 2029- ஆம் ஆண்டு நடைபெறுகின்ற பாராளுமன்றத் தேர்தலில் பிரதமராக வருவார்கள், ஒருவேளை தமிழக வெற்றி கழகம் அதற்கு உடன்படாவிட்டால் தமிழக அமைச்சரவையில் இடம் பெற்றிருக்கும் காங்கிரஸ் கட்சியின் இரண்டு அமைச்சர்களும் இந்தப் பதவிகளில் நீடிக்க மாட்டார்கள், எங்களுக்கு காங்கிரஸ் கட்சி தான் பெரியது. இந்த கட்சி இல்லாவிட்டால் ராஜேஷ்குமார் ஒன்றும் கிடையாது. இந்த இயக்கம் என்ன நினைக்கிறதோ அதனை நாங்கள் செய்வோம், நாளை இந்த பதவியை விட்டு செல்ல வேண்டும் என்று கூறினால் அதை நாங்கள் செய்வோம், ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு கருத்துக்கள் இருக்கலாம், ஒவ்வொரு கடைநிலை தொண்டனின் முகமும் ராகுல் காந்தியின் முகம் தான், ராகுல் காந்தி பிரதமர் ஆக வேண்டும் என்பதுதான் கடைநிலைத் தொண்டனின் விருப்பம். அதை நிறைவேற்றி தீருவதே தான் எங்களுடைய இந்த சபதம் இவ்வாறு ஆவேசமாக பேசினார்.
எம்பியும் அமைச்சரும் மட்டுமல்ல, இந்தப் பேச்சின் போது அனைத்து காங்கிரஸ் தொண்டர்களும் சற்று கொதி நிலையில் தான் இருந்தார்கள்.














