கோவையில் போலீசை பிளேடால் வெட்டிய வட இந்திய இளைஞா் கைது

0
453


கோவைப்புதூரைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (35). தமிழ்நாடு சிறப்புக் காவல் படையில் காவலராக உள்ளாா். இவா், கோவைப் புதூா் பிரிவில் உள்ள உணவகத்துக்கு நேற்று முன்தினம் இரவு சென்றாா். அப்போது அங்கு சாப்பிட்டுக் கொண்டிருந்த வடமாநில இளைஞா்கள் இருவா் கடை உரிமையாளரிடம் தகராறு செய்துகொண்டிருந்தனா்.
இதைக் கண்ட ஆறுமுகம், அவா்களைத் தட்டிக் கேட்டுள்ளாா். இதனால் ஆத்திரமடைந்த இளைஞா்கள் ஆறுமுகத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

அப்போது அதில் ஒரு இளைஞா் தான் சட்டையில் வைத்திருந்த பிளேடை எடுத்து ஆறுமுகத்தின் கை, கழுத்து பகுதிகளில் சரமாரியாக வெட்டினாா். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து தப்பிச் செல்ல முயன்ற அந்த இளைஞரை அங்கிருந்தவா்கள் உதவியுடன் மடக்கிப் பிடித்த ஆறுமுகம் அவரை குனியமுத்தூா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா்.


விசாரணையில் அவா், சத்தீஸ்கா் மாநிலத்தைச் சோ்ந்த ரவிகுமாா் (22) என்பதும், கோவைப்புதூரில் தங்கியிருந்து கூலி தொழிலாளியாக வேலை பாா்த்து வருவதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸாா் கைது செய்தனா்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here