கோவில்பட்டியில் காவல் உட்கோட்டத்தில் அதிகரித்து வரும் கொலை, கொள்ளை, கஞ்சா மற்றும் மது விற்பனையை தடுக்கவும், கோவில்பட்டி மக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப காவலர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கவும் வலியுறுத்தி 23.12.2024 அன்று இ.எஸ்.ஐ. மருந்தகம் அருகே போராட்டம் நடத்த அனுமதி வேண்டி கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் அதன் தலைவர் தமிழரசன் மற்றும் நிர்வாகிகள் நேற்று கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் மனு வழங்க சென்றனர்
. அப்போது காவல் நிலையத்தில் அவர்களது மனுவை ஏற்க மறுத்து விட்டனர். இதனைக் கண்டித்தும், போராட்டத்துக்கு அனுமதி கேட்டும் இன்று கிழக்கு காவல் நிலைய வாயில் முன்பு மனு வைக்கும் போராட்டம் நடத்த கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பினர் திரண்டனர். தலைவர் தமிழரசன், செயலாளர் வழக்கறிஞர் பெஞ்சமின் பிராங்க்ளின், பொருளாளர் சுவேதார் கருப்பசாமி, வழக்கறிஞர் ரவிக்குமார், சமூக செயல்பாட்டாளர்கள் பீமாராவ், செண்பகராஜ் மற்றும் ஏராளமானோர் கிழக்கு காவல் நிலையம் முன்பு திரண்டனர்.
அவர்களிடம் கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் செந்தில் வேல் பேச்சு வார்த்தை நடத்தினார். ஆனால் அவர்கள் மனுவை காவல் நிலையத்தில் கொடுக்க மாட்டோம் நுழைவாயில் முன்பு வைத்துவிட்டு தான் செல்வோம் என கூறியதால், கிழக்கு காவல் நிலையம் உள்ளே இருந்த ஆய்வாளர் ஜின்னா பீர் முகமது வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மனுவை பெற்றுக் கொண்டு போராட்டம் நடத்துங்கள் பாதுகாப்பு தரப்படும் என்று தெரிவித்தார். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.















