தமிழ்நாட்டில் கடந்த உள்ளாட்சித் தேர்தலில் திருநெல்வேலி , கோயம்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு மாநகராட்சிகளில் திமுக பெரும்பான்மை பலத்துடன் பொறுப்பேற்றாலும், மேயர்களுக்கும் உறுப்பினர்களுக்கும் இடையே உள்ள உள்ளூர் வேலைகளால் திருநெல்வேலி, கோயம்புத்தூர் மாநகராட்சிகளில் கட்சித் தலைமை வற்புறுத்தலால் மேயர்கள் விலக்கப்பட்டனர்.
அதையடுத்து தேர்தல் ஆணைய உத்தரவுப்படி, இன்று திருநெல்வேலியிலும் நாளை கோயம்புத்தூரிலும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருந்தது.
திருநெல்வேலியில் கடந்த 29ஆம் தேதி முதல் வேட்பு மனு தாக்கல் செய்யலாம் எனக் கூறப்பட்டிருந்தாலும் திமுக உறுப்பினர்களிடையே ஒருமித்த கருத்து எட்டப்படாததால், நகராட்சி அமைச்சர் நேரு, நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சரான நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோரை கட்சித் தலைமை நேற்று நெல்லைக்கு அனுப்பியது. இரு அமைச்சர்களும் கவுன்சிலர்களிடம் கலந்து பேசி கிட்டு என்ற ராமகிருஷ்ணனை வேட்பாளராக அறிவித்தனர்.
ஆனால் அவர்கள் எதிர்பாராத விதமாக சில மாதங்களுக்க முன்பு கட்சியில் இருந்து நீக்கி வைக்கப்பட்ட ஆறாவது வார்டு கவுன்சிலர் பவுல்ராஜ் களமிறங்கினார்.
நேற்று முதலே அதற்கான அறிகுறிகள் தென்பட்ட நிலையில், தேர்தலுக்கு பொறுப்பாக இருந்த அப்துல் வகாப் எம்எல்ஏ அவரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அவரிடம் போட்டியிடப் போவதில்லை என்று கூறிய பவுல்ராஜ், இன்று காலை குறித்த நேரத்தில் வந்து மனு தாக்கல் செய்தார். அவருக்கு 4ஆவது வார்டு திமுக கவுன்சிலர் வசந்தா, 41ஆவது வார்டு மதிமுக உறுப்பினர் சங்கீதா ஆகியோர் முன்மொழிந்தனர். அரங்கில் வைத்தே அவரிடம் பலவாறு பேசியும் சமாதானம் அடையவில்லை.
இறுதியாக, மாநகராட்சி ஆணையர் முன்னிலையில் நடைபெற்ற தேர்தலில் 53 பேர் வாக்களித்தனர். இதில், கிட்டு என்ற ராமகிருஷ்ணனுக்கு 30 வாக்குகளும், பவுல்ராஜூக்கு 23 வாக்குகளும் கிடைத்தன. 55 கவுன்சிலர்கள் அடங்கிய நெல்லை மாநகராட்சியில், திமுகவுக்கு 44 உறுப்பினர்களும், கூட்டணி கட்சிக்கு ஏழு உறுப்பினர்களும் உள்ளனர். இதில், இன்று தேர்தல் தொடங்கியதும் 53பேர் வந்திருந்தனர். சற்று தாமதமாக வந்த முன்னாள் மேயர் சரவணனிடம், தாமதத்துக்கு காரணம் கேட்டு எழுதி வாங்கி தேர்தலில் வாக்களிக்க அனுமதித்தனர்.

மொத்தம் பதிவான 54 வாக்குகளில் செல்லாதது ஒன்று போக 53 இல் 30 வாக்குகளை மட்டுமே கிட்டுவால் பெற முடிந்தது. கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளரை எதிர்த்து நின்ற பவுல்ராஜ்க்கு 21 திமுக உறுப்பினர்கள் வாக்களித்தது உறுதியாக தெரிகிறது.
இரு மூத்த அமைச்சர்கள் பேச்சு வார்த்தை நடத்தியும், எம் எல் ஏ கண்காணித்தும், கட்சியினர் இவ்வாறு எதிர்த்து வாக்களித்ததில், நெல்லை மாநகராட்சியில் திமுக வேட்பாளர் வென்றார், திமுக தோற்றது என்பதையே காட்டுகிறது.
கோஷ்டி பூசல் காரணமாகத்தான் சரவணன் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அந்தப் பூசல் இன்னும் ஒழியவில்லை என்பது உறுதியாகிறது. இதனால் மக்கள் பணி பாதிக்கப்படாமல் இருந்தால் சரிதான்.















