கோவை வடவள்ளி அடுத்த சோமயம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஜஸ்டஸ் என்பவரின் மகன் டேரியஸ் (53). இவர் ஜார்ஜியா நாட்டில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார். அவருடன் அவரது மூத்த மகன் வசித்து வருகிறார். டாக்டர் டேரியஸ் மனைவி கோவை பச்சாபாளையத்தில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் பேராசிரியையாக பணிபுரிந்து வருகிறார். அவருடன் வசிக்கும் இளைய மகன் கிளிஃப் ஜோஸ்(18) ப்ளஸ்டூ முடித்துள்ளார். அவர் ஜார்ஜியா நாட்டில் மருத்துவ படிப்பிற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார். வரும் மார்ச் மாதம் ஜார்ஜியா நாட்டுக்கு செல்லவேண்டியிருந்தது.
ஆனால், கடந்த சில மாதங்களாகவே பெற்றோர்கள் வேலை நிமித்தம் காரணமாக குடும்பத்தை பிரிந்து தனித்தனியாக வசித்து வரும் மன உளைச்சலில் கிளிஃப் ஜோஸ் இருந்து வந்தார். தானும் ஜார்ஜியாவிற்கு சென்று விட்டால் அம்மாவை பிரியவேண்டுமே என வருந்தினார்.
இந்நிலையில் ஒரு மாதத்திற்கு முன்பு விடுமுறைக்காக கோவைக்கு வந்த தந்தை நேற்று தாயுடன் சுங்கம் பகுதியில் உள்ள நண்பர் பார்க்கச்சென்றிருந்தார். அந்த சமயத்தில் வீட்டில் தனியாக இருந்து வந்த கிளிஃப் ஜோஸ் மன உளைச்சலில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இரவு வீடு திரும்பிய டாக்டர் டேரியஸ் மற்றும் அவரது மனைவி மகன் கிளிஃப் ஜோஸ் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த வடவள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.