தூத்துக்குடி புத்தகக் கண்காட்சி தொடர்பான ஆலோசனைக் கூட்டம் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், எம்பி கனிமொழி தலைமையில், சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் முன்னிலையில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி, காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான், மாநகர மேயர் ஜெகன், மாநகராட்சி ஆணையர் மதுபாலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.எழுத்தாளர்கள் சோ. தர்மன், உதயசங்கர், முத்தாலங்குறிச்சி காமராசு உள்ளிட்டோரும் ஆலோசனையில் பங்கு கொண்டுள்ளனர்.
இதில், வரும் செப்டம்பர் 20ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை சங்கராப்பேரியில் புத்தக கண்காட்சி நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்யவும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

இதனை மாவட்டத்தில் உள்ள எழுத்தாளர்களும் பதிப்பகத்தாரும் ஆர்வத்துடன் வரவேற்றுள்ளனர். அதே வேளை, கடந்த இரு ஆண்டுகளாக நடைபெற்ற புத்தகக் கண்காட்சியில் உள்ளூர் எழுத்தாளர்கள் அனைவருக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. புத்தகக் கண்காட்சி மாவட்டம் தோறும் நடத்தப்படுவதன் காரணமே அந்தந்த மாவட்டத்தில் உள்ள எழுத்தாளர்கள் பதிப்பகத்தார் அங்கீகரிக்கப்பட வேண்டும், எழுத்து துறையில் முன்னேற ஊக்குவிக்கப்பட வேண்டும் என்பதற்காகத்தான்.
எனவே, இம்முறையாவது மாவட்டத்திலுள்ள எழுத்தாளர்கள் பதிப்பகத்தாரை அடையாளம் கண்டு, நடக்கும் பத்து நாள் நிகழ்ச்சிகளில் அவரவர்க்கு உரிய இடமும் அங்கீகாரமும் வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றனர்.









