நடிகரும் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவருமான விஜய், ஆகஸ்ட் 22ஆம் தேதி, வியாழன் அன்று சென்னை பனையூரில் அமைந்திருக்கும் அவரின் கட்சி அலுவலகத்தில் கட்சிக் கொடியையும் கட்சியின் பாடலையும் அறிமுகம் செய்து வைத்தார்.
நடிகர் விஜய் சென்னையின் நீலாங்கரையில் அமைந்திருக்கும் அவருடைய இல்லத்தில் இருந்து பனையூருக்குச் சென்றார். அவருடைய அம்மா ஷோபா, அப்பா சந்திரசேகர் ஆகியோர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.
நூற்றுக்கணக்கான ரசிகர்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் கட்சி அலுவலகத்தில் குவிந்திருந்தனர். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் ஆகியோர் நடிகர் விஜய்க்கு தங்களின் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் அவர் அறிமுகப்படுத்தி வைத்த அந்த கட்சி கொடியில் இரு போர் யானைகளும், 23 பச்சை நிற நட்சத்திரங்கள் மற்றும் 5 ஊதா நிற நட்சத்திரங்களும் உள்ளது.
மேலும் இதற்கான அர்த்தங்கள் மற்றும் கட்சியின் கொள்கைகள் பின்னர் அறிவிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே தூத்துக்குடி விமான நிலையத்தில் தமிழக வெற்றிக்கழகம் கட்சி கொடியை அறிமுகப்படுத்திய நடிகர் விஜய்க்கு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.













