கோவை சாய்பாபா காலனி அடுத்த கோவில் பகுதியில் தனியார் அப்பார்ட்மெண்ட் உள்ளது . இங்கு பெருமாள் என்பவரின் மகன் பிரசாந்த்(29) குடும்பத்துடன் வசித்து வருகிறார். கம்ப்யூட்டர் என்ஜினீயரான இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு குடும்பத்தோடு பழனி கோயிலுக்கு சென்றுவிட்டு மீண்டும் வீடு திரும்பினர். வீட்டில் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 12 பவுன் தங்க நகைகள் காணாமல் போயிருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பிரசாந்த், சாய்பாபா காலனி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார் .புகாரில் தங்களது வீட்டில் பணிபுரியும் பணிப்பெண் சூர்யா மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்திருந்தனர்.
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வீட்டில் பணிபுரிந்து வந்த இடையர்பாளையம் பகுதியைச் சேர்ந்த அருள் பிரபு என்பவரின் மனைவி சூர்யா(30)விடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த பெண் பிரசாந்த் வீட்டில் இருந்த நகைகளை திருடியதை ஒப்புக்கொண்டார். அவர் திருடி வைத்திருந்த நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதேபோல அதே அபார்ட்மெண்டில் குடியிருந்து வரும் விசுவநாத்( 42 )என்பவரும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் குடும்பத்தோடு சொந்த ஊருக்கு சென்று திரும்பி வந்து பார்த்த பொழுது வீட்டில் இருந்த 10 பவுன் தங்க நகைகள் காணாமல் போயிருந்தது. அவரது வீட்டிலும் சூரியாவே பணிபுரிந்திருந்தார். நகை திருட்டு பற்றி சூர்யாவிடம் அப்போது விசாரித்ததில் சரியாக பதில் அளிக்காமல் இருந்துள்ளார். அதையடுத்து விஸ்வநாதன் அந்த பெண்ணை வேலையை விட்டு நிறுத்தியுள்ளார்.
இந்நிலையில் தற்போது பிரசாந்த் வீட்டில் நடைபெற்ற திருட்டு சம்பவத்தில் சூரியா சம்பத்தப்பட்டிருந்ததை அறிந்த விஸ்வநாத், சாய்பாபா காலனி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். இந்த புகாரில் போலீசார் விசாரணை நடத்தியதிலும் சூர்யா திருடியது தெரியவந்தது. இதையடுத்து சூர்யாவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.












