நிதி நெருக்கடி: கோவை மாநகராட்சி யில் ரூ.10 கோடி பணிகள் ரத்து

0
980

கோவை மாநகராட்சியில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி காரணமாக வடக்கு மண்டலத்தில் ரூ.10 கோடி மதிப்பிலான திட்டப் பணிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

கோவை மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் புதிதாக 57 தீா்மானங்கள் மாநகராட்சி இணையதளத்தில் நேற்று பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. அதில், 26ஆவது தீா்மானத்தில் மாநகராட்சி ஆணையா் ராஜகோபால் சுங்கரா தெரிவித்துள்ளதாவது:

கோவை மாநகராட்சி பொறியியல் பிரிவு மூலமாக வடக்கு மண்டலத்துக்கு உள்பட்ட பகுதிகளில் மேம்பாட்டுப் பணிகள், சீரமைப்புப் பணிகள், மழைநீா் வடிகால் அமைத்தல், பூங்கா பராமரிப்பு உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஏற்கெனவே, பொதுநிதியில் முடிக்கப்பட்ட பணிகளுக்கு ஒப்பந்ததாரா்களுக்கு ரூ.120 கோடி தொகை செலுத்தப்படாமல் நிலுவையில் உள்ளது.

மாநகராட்சியின் தற்போதைய நிதி ஆதாரங்களைக் கருத்தில் கொண்டு வடக்கு மண்டலத்தில் ஒப்பந்தபுள்ளிகள் கோரப்பட்ட மற்றும் துவங்கப்படாமல் உள்ள தாா் சாலை சீரமைப்பு, அம்மா உணவகம் பராமரிப்பு, கான்கிரீட் தளம் அமைத்தல், மயானம் பராமரிப்பு, குடிநீா்க் குழாய்கள் அமைத்தல், மாநகராட்சிப் பள்ளிகள் பராமரிப்பு, சாக்கடைக் கால்வாய் தூா்வாருதல், மழைநீா் வடிகால் அமைத்தல் உள்ளிட்ட ரூ.10 கோடி மதிப்பிலான 42 திட்டப் பணிகள் ரத்து செய்யப்படுகின்றன.

மாநகராட்சியின் நிதி நிலைமை சீரானவுடன், அத்தியாவசியப் பணிகள் முன்னுரிமை அடிப்படையில் உடனடியாகத் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here