கோவை சூலூர் அருகே பாப்பம்பட்டி பிரிவில் அரிசி மூட்டைகளுடன் லாரி ஒன்று நின்றிருந்ததை அந்த வழியாக ரோந்து வந்த போலீசார் பார்த்தனர். பின்னர் லாரி டிரைவரான ரத்தினபுரியை சேர்ந்த ராஜ பட்டாணி(39) என்பவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் அதே பகுதியில் உள்ள கோவிந்தன் என்பவருக்கு சொந்தமான குடோனில் இருந்து அரிசி மூட்டைகளை ஏற்றி வந்ததாக தெரிவித்தார்.
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், அவரை அந்த குடோனுக்கு அழைத்து சென்றனர். பின்னர் அங்கிருந்தவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த சொக்கலிங்கம்(40), ராஜா(47), கோவை கவுண்டம்பாளையத்தை சேர்ந்த அரிகிருஷ்ணன்(20) ஆகியோர் வெளிமாவட்டங்களில் இருந்து ரேஷன் அரிசியை கடத்தி வந்ததும், அதனை பாலீஷ் செய்து பல்வேறு நிறுவனங்களின் பெயரில் சாக்குமூட்டைகளில் அடைத்து விற்பனை செய்ததும் தெரியவந்தது.
உடனே அவர்கள் 4 பேரையும் போலீசார் பிடித்து, குடிமைப்பொருள் வழங்கல் துறையினரிடம் ஒப்படைத்தனர். பின்னர் அவர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் 37 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.