தமிழக டிஜிபி சைலேந்திரபாபு கடந்த அக்டோபர் மாதம் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி இருந்தார். அதில், 1992ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட பணியிட வழிகாட்டி நெறிமுறைகளை குறிப்பிட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் அவர்களது சொந்த மாவட்டங்களில் பணி அமர்த்துவதை தவிர்க்க வேண்டும், உதவி ஆய்வாளர்களை அவர்களது சொந்த சப் டிவிஷனில் பணி அமர்த்த கூடாது. ஒரு காவல் நிலைய பகுதியில் மெஜாரிட்டியாக உள்ள சமூகத்தை சேர்ந்த போலீஸ் அதிகாரிகளை அங்கு பணியமர்த்த கூடாது என அறிவுறுத்தி இருந்தார்.
இந்த விதிமுறைகளை உல்டா செய்து குமரி மாவட்டத்தில் பல போலீஸ் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர்கள் பணியில் இருந்து வருகின்றனர். அதாவது பிறந்த மாவட்டத்தில் தானே பணியாற்ற முடியாது? மணமுடித்து உறவுகளை ஏற்படுத்திக் கொண்டால் விதிமுறைகள் கட்டுப்படுத்தாது அல்லவா? எனவே, குமரி மாவட்டத்தில் திருமணம் முடித்து, சொந்த வீடு, சொத்து வாங்கி சுமார் பதினைந்து வருடங்களுக்கு மேல் இங்கேயே சுற்றிசுற்றி பணிபுரிந்து வருகின்றனர்.
ஆனால் உயர் அதிகாரிகள் விசாரணையின்போது, பணியில் சேரும்போது எந்த மாவட்டத்தில் வசித்து வந்தார்களோ, அந்த மாவட்டத்தை சொந்த வசிப்பிடம் என்று கூறி ஏமாற்றுகின்றனர். பணி இடமாற்றம் செய்ய வேண்டிய தேர்தல் உள்ளிட்ட காலகட்டத்தில் கூட வெளி மாவட்டத்திற்கு சென்ற ஒரு சில மாதங்களிலேயே மீண்டும் குமரிமாவட்டத்தில் பணியிட மாற்றம் பெற்று வந்துவிடுகின்றனர்.
இது வரை குமரி மாவட்டத்தில் மணம்முடித்து, இங்கேயே சொத்து, சுகம், குடும்பம், பிள்ளை, குட்டிகள் என்று செட்டில் ஆகிவிட்ட 5 இன்ஸ்பெக்டர்கள் இங்குள்ள காவல் நிலையங்களில் சட்டம் ஒழுங்கு பிரிவில் பணியாற்றி வருகின்றனர்.
மாவட்டத்திலேயே அதிக முக்கியத்துவம் வாய்ந்த காவல் உட்கோட்டத்தில் சட்டம் ஒழுங்கு பிரிவில் பணிபுரியும் அதிகாரியின் சொந்த ஊர் திருநெல்வேலி. குமரி மாவட்டத்தில் மணமுடித்து இங்கேயே நாகர்கோவிலுக்கு அருகே சொகுசு வீடு ஒன்றை கட்டி மனைவி மக்களுடன் வசித்து வருகிறார் . அங்கிருந்து சுமார் 20 கிலோமீட்டர் தூரம் உள்ள அலுவலகத்திற்கு காவல்துறை வாகனத்தில் தினமும் பயணம் செய்கிறார்.உட்கோட்ட அலுவலகத்தின் அருகே உள்ள கேம்ப் வீட்டை பகலில் ரெஸ்ட் எடுப்பதற்காக மட்டும் பயன்படுத்துகிறார்.
சொந்த சமூகத்தினர் மெஜாரிட்டியாக உள்ள காவல் நிலைய பகுதிகளில் காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்களை பணியமர்த்த கூடாது என்ற விதிமுறையும் காற்றில் பறந்துள்ளது. தக்கலை, கொல்லங்கோடு உட்பட பல காவல் நிலையங்களில் அப்பகுதியில் வசிக்கும் பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்த காவல் அதிகாரிகளே பணிபுரிந்து வருகின்றனர். மேலும், 90{7a0882499a9dac11d1a5e618ecfeec8f2b279bdf1fc3589101913219fc8b42ec} காவல் ஆய்வாளர்கள் குமரி மாவட்ட காவல் நிலையங்களிலேயே பல வருடங்களாக பணிபுரிந்து வருகின்றனர். சில காவல் ஆய்வாளர்களின் இணையர் களும் காவல்துறையிலேயே, அதுவும் குமரி மாவட்டத்திலேயே பணிபுரிந்து வருகின்றனர்.
கடந்த 1997ல் திமுக ஆட்சியின்போது தென் மாவட்டங்களில் இருந்து ஒரே சமயத்தில் 173 காவல் ஆய்வாளர்கள் பணியிட வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி அப்போது பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். சென்னை போன்ற வட மாவட்டங்களில் காவல் ஆய்வாளர்கள் தென் மாவட்டங்களுக்கு பணி நியமனம் செய்யப்பட்டனர்.
தேங்காய்பட்டணம் வெடிகுண்டு வழக்கில் அமைக்கப்பட்ட நீதிபதி முருகேசன் விசாரணைக் கமிஷன் கடந்த 2000ல் அளித்த பரிந்துரைகளை ஏற்ற தமிழக அரசு அரசாணை ஒன்றை பிறப்பித்தது. அந்த அரசாணையில், ‘குமரி மாவட்டத்தை சொந்த வசிப்பிடமாகக் கொண்ட காவல் ஆளினர்கள் கீழ்மட்டம் முதல் மேல்மட்டம் வரை பணிபுரிந்து வருகிறார்கள். விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு அவர்களால் பணியாற்ற இயலவில்லை. அதனால் குமரி மாவட்டத்தை சொந்த வசிப்பிடமாக கொண்ட கீழ்மட்டம் முதல் மேல்மட்டம் வரை பணிபுரியும் காவல் ஆளினர்களை வெளிமாவட்ட த்திற்கு பணியிட மாற்றம் செய்ய வேண்டும். குமரி மாவட்டத்தில் வெளிமாவட்ட காவல் ஆளினர்களை மட்டுமே பணி அமர்த்த வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த அரசாணைக்கு விரோதமாகவே குமரி மாவட்ட காவல் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. இதனால்தான் பல குற்ற வழக்குகளில் கட்டப்பஞ்சாயத்து நடத்துவது, புகார்கள் மேல் வழக்கு பதிய மறுப்பது, திருமணம் முடித்த குடும்பத்து உறவினருக்கு சாதகமாக நடப்பது, பொய் வழக்கு போடுவது போன்ற நடவடிக்கைகள் சர்வ சாதாரணமாக நடைபெறுகிறது. குறிப்பாக இரணியல் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட சிஎஸ் ஆர் 1007/2021 புகார் உட்பட பல உதாரணங்களை கூறலாம்.
அதேபோல, தக்கலை காவல் நிலையத்தில் பொய் வழக்கு போட்டு பிரபலமான காவல் ஆய்வாளர் குமரி மாவட்டத்திலேயே தொடர்ந்து பணிபுரிந்து வருகிறார். 2008ஆம் ஆண்டு குமரி மாவட்டத்தில் பணியை தொடங்கியவர், இடையில் ஒன்றிரண்டு ஆண்டுகள் மட்டும் கோவில்பட்டி காவல் நிலையத்தில் பணிபுரிந்தார். மீண்டும் வந்துவிட்டார். இதேபோல, களியக்காவிளை காவல் நிலையத்தில் பணிபுரிந்த உதவி ஆய்வாளர் அந்தோணியம்மாள் தற்போது கொல்லங்கோடு காவல் நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் குமரி மாவட்டத்தில் சுமார் 15 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகிறார்.
குமரி மாவட்டத்தில் பணிபுரிந்து வரும் காவல் ஆளினர்களின் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்காக பல வழக்குகளை கிடப்பில் போடுவதும், புலனாய்வு செய்யும் சில வழக்குகளில் ரகசிய தகவல் கொடுத்து குற்றவாளிகளை தப்ப வைப்பதும் நடக்கிறது. இதுபோன்ற சம்பவம் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் சுசீந்திரம் காவல் நிலையத்தில் நடந்ததும் அதன் பின்னர் போலீசார் இருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
ஆகவே, தமிழக டிஜிபியின் சுற்றறிக்கை படியும் 2000ல் பிறப்பிக்கப்பட்ட அரசாணைப்படியும் சொந்த மாவட்டத்தில் சொகுசு வாழ்க்கை நடத்தும் காவல் ஆதிகார்கள் மீது நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இங்கு சட்டம் ஒழுங்கை சீரமைக்க முடியும்.