தென் மாவட்டங்களில் வெள்ள நிவாரண பணிகள் மெல்லவே நடக்கின்றன. குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத் தலைநகரான தூத்துக்குடிக்கு அருகே உள்ள ஊராட்சி பகுதிகளில் மிகவும் மெத்தனப்போக்காகவே இருக்கிறது.
தூத்துக்குடியை ஒட்டியுள்ள மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதியைச் சேர்ந்த தாளமுத்து நகரில் ஆயிரத்துக்கு மேற்பட்ட வீடுகள் உள்ளன. கடந்த மூன்று நாட்களாக இடுப்பளவு தண்ணீரில் இயங்கிக் கொண்டிருக்கின்றனர் மக்கள். தாழ்வான பல வீடுகளுக்குள் தண்ணீர் பஞ்சம் புகுந்ததால் மக்கள்புகலிடம் தேடி அலைகின்றனர். அவர்களுக்கு உணவும் அத்தியாவசிய உதவியும் கிடைக்கவில்லை.
அருகிலேயே அமைச்சர் கீதா ஜீவன் இருந்தும், கனிமொழி எம்பி மாவட்டம் முழுவதும் ஆய்வு பயணம் மேற்கொண்டும் பக்கத்தில் உள்ள தாளமுத்து நகரை கண்டு கொள்ளவில்லை என்ற வேதனை அப்பகுதி மக்களிடையே உள்ளது.

தொடர்ந்து நீர் தேங்கி இருப்பதால் நோய் அபாயமும் உள்ளது. உடைமைகள் வீடுகளுக்குள் சிக்கிக்கொண்டதால் அன்றாடத் தேவைகளுக்காக மக்கள் அலைமோதுகின்றனர். அதிகாரிகளும் அமைச்சர் மற்றும் எம்பி பின்னால் சுற்றுவதால் கிராம ஊராட்சியான மாப்பிள்ளையூரணியை எட்டிப் பார்க்கவில்லை.
அமைச்சருக்கு மதிப்பளித்து போராடாமல் இருக்கிறோம். எங்களை மதித்து அவரும் வர வேண்டும் என்கின்றனர் பொதுமக்கள்.









