மகாராஷ்டிராவில் சிவசேனா ஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸ் விதித்த நிபந்தனைப்படி பாஜக உறவை அக்கட்சி உதறியது. அடுத்த கட்டமாக காங்கிரஸ் ஆதரவுக்காக சிவசேனா முயற்சி எடுத்தது. பலமுறை நேரிலும் போனிலும் தொடர்பு கொண்டும் காங்கிரஸ் தனது ஆதரவை தெரிவிக்கவில்லை.
இதற்கிடையே சரத்பவார் இரண்டு கட்சிக்கும் இடையே பாலமாய் நின்று பேச்சுவார்த்தைக்கு உதவினார். ஆனாலும், மாலை வரை காங்கிரஸ் ஆதரவுக்காக தலையசைக்கவில்லை. இதற்கிடையே சுயேட்சைகளுடனும் இரு சிறு கட்சிகளுடனும் சிவசேனா பேசியது.
அதேவேளையில் ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க கூடுதல் அவகாசம் கேட்டனர். ஆனால், ஆளுநர் இந்த கோரிக்கையை பரிசீலிப்போம் என்று கூறினாரே தவிர, நேரம் கூடுதலாக கொடுக்கவில்லை.
இரவு தொடங்கிய நேரம் காங்கிரஸ் தேசியவாத காங்கிரசுடன் பேசி முடிவெடுப்போம் என்ற நிலைப்பாட்டுக்கு வந்தது. இறுதியில் வெளியிலிருந்து ஆதரவு அளிக்கப்போவதாக தெரிவித்துள்ளதாக தெரிகிறது. அது உறுதியான முடிவா என உறுதிப்படுத்த முடியவில்லை.
பாஜகவை ஆட்டுவித்த சிவசேனாவின் குடுமி இப்போது காங்கிரசின் கையில் உள்ளது. ஆனாலும், ஆளுநர் அவகாசம் கொடுத்தால் சட்டமன்ற உறுப்பினர்கள் கருத்துப்படி காங்கிரஸ் ஆதரவுடன் சிவசேனா ஆட்சி அமையும் என்றே நம்ப முடிகிறது.












