காரமடை அடுத்த கண்டியூர் பகுதியைச் சேர்ந்த சின்னசாமி என்பவரின் மனைவி புஷ்பா (37). கூலி வேலை செய்து வந்த புஷ்பாவின் கணவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் இறந்து போனார். இதையடுத்து புஷ்பா கணவர் இறந்த மன வேதனையில் இருந்து வந்தார். இதன்காரணமாக புஷ்பா மதுவுக்கு அடிமையானார். இதுகுறித்து அவரது மகன் பெருமாள் சாமி மதுவை நிறுத்தும்படி கூறினார் .ஆனால் புஷ்பா மதுப்பழக்கத்தை கைவிட முடியாமல் தவித்தார். இதையடுத்து மனமுடைந்த நிலையில் இருந்து வந்த புஷ்பா நேற்று பூச்சி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார் .
அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் புஷ்பா பரிதாபமாக உயிர் இழந்தார். இது குறித்து காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












