நெல்லை மாநகர் பகுதியில் ஊரடங்கு விதிமுறைகளை மீறி தேவையில்லாமல் சாலை சுற்றித்திரிந்த கார் பைக், ஆட்டோ உள்ளிட்ட 200 வாகனங்களை போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.
நெல்லையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது இதை தடுக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அத்தியாவசிய பொருட்களான காய்கறி மளிகை சாமான்கள் வாங்குவதற்காக காலை 6 மணி முதல் 10 மணி வரை விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதனையும் மீறி கார், பைக் உள்ளிட்ட வாகனங்களில் ஏராளமானவர்கள் தேவையில்லாமல் சாலைகளில் சுற்றி திரிகின்றனர். இவர்களை தடுக்கும் வகையில் காவல்துறையினர் மாநகர் பகுதியில் சோதனை சாவடிகள் அமைத்து தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர்.
இருந்தபோதும் சாலையில் தேவையில்லாமல் வந்தவர்களை முதல் கட்டமாக எச்சரித்து அனுப்பினர், ஆனாலும் இதனை யாரும் கண்டுகொள்ளவில்லை, தொடர்ந்து தேவையில்லாமல் வெளியில் சுற்றுவதை வாடிக்கையாக செய்தனர் இதனை அடுத்து இரு சக்கர நான்கு சக்கர வானங்களில் வருபவர்களை சாலைகளில் நெடுநேரம் காக்க வைப்பது, வெளியில் வரமாட்டோம் என உறுதி மொழி எடுக்க வைத்து, ஆம்புலன்சில் ஏற்றி நூதன தண்டனைகள் வழங்கப்பட்டது. ஆனாலும் இந்த தண்டனை முறைகளும் காவல்துறைக்கு கைகொடுக்கவில்லை,

இதன்பின்னரும் சாலையில் தேவையில்லாமல் வெளியில் வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் மாநகர காவல்துறையினர் அதிரடி நடவடிக்கையை கையாண்டனர் மாநகர் பகுதி முழுவதும் இன்று காலை தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர் நெல்லை வண்ணார்பேட்டையில் மாநகர காவல்துறை சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் சீனிவாசன் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது தேவையில்லாமல் ஊரடங்கு விதிமுறைகளை மீறி வெளியில் சுற்றிய நபர்களின் கார், ஆட்டோ, இருசக்கர வாகனம் உள்ளிட்ட வாகனங்களை அதிரடியாக பறிமுதல் செய்தனர். இன்று மாநகர் பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில் மொத்தம் கார் பைக் உள்பட 200 க்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து வாகனங்களும் அந்தந்த காவல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இனி ஊரடங்கு விதிமுறைகளை மீறி தேவையில்லாமல் வெளியில் செல்லும் நபர்களின் இருசக்கர வாகனங்கள் கட்டாயமாக பறிமுதல் செய்யப்படும் என மாநகர துணை ஆணையாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.