கோவை சுங்கம் பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவரின் மகன் சதீஷ்குமார்( 21). ஒன்பதாம் வகுப்பு வரைக்கும் படித்து விட்டு அந்தப் பகுதியில் பெயிண்டிங் வேலைக்கு சென்று கொண்டு இருந்தார்.அப்போது அதே பகுதியில் 10-ம் வகுப்பு படித்து முடித்து விட்டு தனியார் நிறுவனத்திற்கு வேலைக்கு சென்று கொண்டிருந்த சிறுமியுடன் காதல் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து 3 மாதங்களுக்கு முன்பு அந்த சிறுமியை அழைத்துச் சென்று கோவை பச்சாம்பாளையம் பகுதியில் திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்தார். இதுகுறித்து பெண்ணின் பெற்றோர்கள் புகார் அளித்திருந்தனர்.
இதைத் தொடர்ந்து கோவை அனைத்து மகளிர் காவல் நிலையம் கிழக்கு போலீசார் இருவரையும் தேடி வந்தனர். இந்நிலையில் நிலையில் நேற்று மாலை சதீஷ் குமாரையும் அந்த சிறுமியையும் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து போலீசார் விசாரித்து கொண்டிருந்தனர்அப்போது மகளிர் காவல் நிலையத்தில் ஆயுத பூஜைக்கான வேலைகள் நடந்து கொண்டிருந்தது. பூஜை பணிகளில் போலீசார் மும்முரமாக இருந்த பொழுது சதீஷ்குமார் அந்த சிறுமியுடன் திடீரென மாயமானார்.
பூஜை பணிகளை முடித்துவிட்டு போலீஸார் பார்த்த போது இருவரும் தப்பிச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து மீண்டும் போலீசார் இருவரையும் தேடும் பணியில் ஈடுபட்டனர். தப்பிச்சென்ற இருவரையும் இன்ஸ்பெக்டர் உஷா தலைமையிலான போலீசார் இன்று காலை சுற்றி வளைத்து பிடித்தனர். பிறகு சிறுமியை திருமணம் செய்த சதீஷ்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். சிறுமி கோவையில் உள்ள பெண்கள் காப்பகத்துக்கு அனுப்பப்பட்டார்.












