சென்னை புதுப்பேட்டை வேலாயுதம் தெருவைச் சேர்ந்தவர் கிறிஸ்துராஜ் (43). இவர் தனியார் பைனான்ஸ் நிறுவனம் வைத்து நடத்தி வந்துள்ளார். இவரது நிறுவனத்தில் புதுப்பேட்டை பகுதியில் உள்ள வியாபாரிகள், பொதுமக்கள் என 100-க்கும் மேற்பட்டவர்கள் முதலீடு செய்துள்ளனர். ஆனால் பணம் முதலீடு செய்த நூற்றுக்கணக்கானோரை ஏமாற்றி மோசடி செய்து கிறிஸ்துராஜ் தலைமறைவாகி விட்டார் என கூறப்படுகிறது.
சீட்டு முதிர்வடைந்த பின்னும் முதலீட்டாளர்களுக்கு கிறிஸ்துராஜ் பணம் தராமல் ஏமாற்றி வந்தது தொடர்பாக சுமார் 17 பேர் கடந்த 6 ஆம் தேதி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தனர்.
புகாரின் அடிப்படையில் பாதிக்கப்பட்டவர்களை காவல் ஆணையரக போலீசார் நேரில் அழைத்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணைக்குப் பின் பணத்தை இழந்த பாதிக்கப்பட்டவர்களில் 6 நபர்கள், திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் உள்ள கிறிஸ்துராஜின் உறவினர் சஜின் என்பவர் நடத்தி வரும் தனியார் உணவகத்திற்குச் சென்று, கிறிஸ்துராஜ் இருப்பிடம் பற்றி பேச வேண்டுமெனக் கூறி அவரை அழைத்துள்ளனர். அவர் வராததால் திடீரென சஜினை இருசக்கர வாகனத்தில் வலுக்கட்டாயமாக ஏற்றி கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த உணவகத்தின் ஊழியரான சையூல் இதுகுறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு உடனடியாக தகவல் அளித்தார். அதனடிப்படையில் திருவல்லிக்கேணி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, போலீசார் சஜினை செல்போன் சிக்னலை வைத்து தேடி வந்துள்ளனர். போலீசாரின் விசாரணையில் செல்போன் சிக்னல் புதுப்பேட்டை பகுதியயை காட்டிய நிலையில், அங்கு சென்ற போலீசார் சஜினை கடத்திய 4 பேர் கொண்ட கும்பலை பிடித்தனர்.
இதனையடுத்து சஜினை மீட்ட போலீசார் அவரைக் கடத்திச் சென்று தாக்கிய புதுப்பேட்டையைச் சேர்ந்த முகமது ஹக்கீம் (35), மோகன்ராஜ் (42), ராஜா ஹுசைன் (53) மற்றும் கொளத்தூரைச் சேர்ந்த முகமது சுல்தான் (58) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.












