கோவை ரெட்பீல்டில் உள்ள இந்திய விமானப் படை கல்லூரிக்கு நாடு முழுவதும் இருந்து 30க்கும் மேற்பட்ட ஆண், பெண் அதிகாரிகள் பயிற்சிக்காக வந்திருந்தனா்.
இதில், தில்லியைச் சோ்ந்த பெண் அதிகாரி ஒருவா், வளாகத்தில் கூடைப்பந்து
விளையாடியபோது காயம் ஏற்பட்டதையடுத்து வலி நிவாரணிகளை எடுத்துக்கொண்டு தனது அறைக்குச் சென்று ஓய்வு எடுத்தாா்.
அப்போது அதே வளாகத்தில் தங்கியிருந்த, பயிற்சிக்கு வந்த சத்தீஸ்கா் மாநிலத்தைச் சோ்ந்தஃபிளைட் லெப்டினென்ட் அமிதேஷ் ஹாா்முக்
அப்பெண்ணின் அறைக்குள் அத்துமீறி நுழைந்து அவரை பாலியல் வல்லுறவு கொண்டார்.
இது குறித்து, விமானப் படை உயரதிகாரிகளிடம் அந்தப் பெண் புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக்
கூறப்படுகிறது. இதையடுத்து அவா் மாநகரக் காவல் ஆணையரைச் சந்தித்து புகாா் அளித்தாா்.
இந்தப் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த கோவை மத்திய பகுதி அனைத்து மகளிா் போலீஸாா் அமிதேஷ் ஹாா்முக்கை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி உடுமலை கிளைச் சிறையில் அடைத்தனா்.
இந்நிலையில், மாவட்ட கூடுதல் மகளிா் நீதிமன்றத்தில் கடந்த திங்கள்கிழமையன்று இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றபோது, இந்த வழக்கை விமானப் படை நீதிமன்றமே விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று விமானப் படை தரப்பிலும், கோவை மாநகர போலீஸாா் வழக்கை விசாரிக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட பெண் தரப்பிலும், வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதால் மாநகர போலீஸாரே விசாரணை மேற்கொள்ள உத்தரவிடுமாறு மாநகர போலீஸாா் தரப்பிலும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
இவற்றைப் பதிவு செய்த நீதிமன்றம் அமிதேஷ் ஹாா்முக்குக்கு விதிக்கப்பட்ட காவலை நேற்று வரை நீட்டித்து உத்தரவிட்டது.
இந்நிலையில்,இந்த வழக்கு மாவட்ட கூடுதல் மகளிா் நீதிமன்ற நீதிபதி (பொறுப்பு) என்.திலகேஸ்வரி முன்பு நேற்று மதியம் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது குற்றம்சாட்டப்பட்ட விமானப் படை அதிகாரி அமிதேஷ் ஹாா்முக் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டாா்.
மனுவை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கை மாநகர போலீஸாா் விசாரிக்க அதிகாரம் இல்லை. எனவே விமானப் படை அதிகாரி அமிதேஷ் ஹாா்முக்கை விமானப் படையிடமே ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டாா்.















