சிவகங்கையை அடுத்த பாசாங்கரையை சேர்ந்தவர் இருளப்பசாமி (வயது 71). இவருக்கு இருளாயி என்ற மனைவியும், கண்ணாயிரம் என்ற மகனும், பூச்சி என்ற மகளும் உள்ளனர். இந்த நிலையில் இருளப்பசாமி பாசாங்கரையில் ஜீவசமாதி அடையப் போவதாக, கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்தார்.
அதைத்தொடர்ந்து அவரிடம் ஆசி பெறுவதற்காக தினமும் ஏராளமான ஆண்களும், பெண்களும் பாசாங்கரைக்கு வந்த வண்ணம் இருந்தனர். கடந்த 12-ம்தேதி சாமியார் இருளப்பசாமி ஜீவசமாதி அடைவதற்காக தேர்வு செய்த இடத்தின் அருகில் குழி தோண்டப்பட்டது. மேலும் இறுதிச்சடங்குக்கு தேவையான ஏற்பாடுகளையும் செய்தனர்.
இந்நிலையில் ஜீவசமாதி அடையும் முடிவை திடீரென இருளப்பசாமி ஒத்திவைத்தார். இதையடுத்து உண்டியல் வசூலிக்கும் நோக்கத்தில் இவ்வாறு செயல்பட்டதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. சாமியார் இருளப்பசாமி மற்றும் அவரது மகன் உள்ளிட்ட 7 பேர் மீது சிவகங்கை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.












