கோவை சத்தி ரோடு சரவணம்பட்டி பகுதியில் கமலம் ஆட்டோ பைனான்ஸ் என்ற பெயரில் பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வருபவர் சரவண செல்வன் (39). இவர் பழைய இருசக்கர வாகனங்களுக்கு பைனான்ஸ் செய்து வருகிறார். இவரது நிறுவனத்தில் கொண்டயம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஆறுவசெட்டி புதூர் பகுதியை சேர்ந்த செந்தில்குமார் என்பவரின் மனைவி கவிதா(45) என்ற பெண் கடந்த 2 வருடங்களாக மேனேஜராக பணிபுரிந்து வந்தார்.
இந்த பைனான்ஸ் நிறுவனத்தில் ஏற்கனவே இருசக்கர வாகனங்களுக்கு பைனான்ஸ் வாங்கி சரியாக செலுத்தியவர்களுக்கு மீண்டும் புதிய ஆவணங்கள் எதுவும் வாங்காமல் பைனான்ஸ் கொடுப்பது நடைமுறையில் உள்ள வழக்கம். அதனை பயன்படுத்தி உரிமையாளருக்கு தெரியாமல் கவிதா ஏற்கனவே பைனான்ஸ் வாங்கி திருப்பி கட்டியவர்களின் பெயரில் மீண்டும் பைனான்ஸ் போடுவதாக கூறி இருக்கிறார். அப்படி வாடிக்கையாளர்கள் பெயரில் பைனான்ஸ் போட்டு விட்டு அந்தப் பணத்தை எடுத்துச் சென்றுள்ளார். கடந்த வாரத்தில் நிறுவனத்தின் கணக்குகளை ஆய்வு செய்தபோது கையிருப்பு பணம் வெகுவாக குறைந்துள்ளது உரிமையாளருக்கு தெரிய வந்தது.
அப்போது கவிதாவை விசாரித்தபோது தனது குடும்ப செலவிற்கு பணத்தை எடுத்து விட்டதாக கூறி ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாயை உரிமையாளரிடம் திருப்பி கொடுத்துள்ளார். இதையடுத்து சரவண செல்வன் கவிதாவை வேலையிலிருந்து நிறுத்தினார். தொடர்ந்து நிறுவனத்தின் கணக்குகளை ஆய்வு செய்த பொழுது கடந்த ஒரு ஆண்டாக இப்படி சுமார் 72 வாடிக்கையாளர்கள் பேரில் பல லட்ச ரூபாயை மோசடி செய்துள்ளது தெரிய வந்தது. தொடர்ந்து சரவண செல்வன் சரவணம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் இதுகுறித்து புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கவிதா நிறுவனத்தில் இருந்து பல லட்ச ரூபாய் வரை கையாடல் செய்து அதன் மூலம் தனது கணவருக்கு இன்னோவா கார் வாங்கி இருப்பதும், புதிய வீடு வாங்க அட்வான்ஸ் கொடுத்து இருப்பதும் கண்டு பிடிக்கப்பட்டது.
தொடர்ந்து தலைமறைவாக உள்ள கவிதாவை சரவணம்பட்டி போலீசார் தேடி வருகின்றனர்.











