நீதிபதி மகனிடம் தகராறு: வன அலுவலா் கைது

0
557

சென்னை உயா் நீதிமன்ற நீதிபதி ஒருவரின் மகனான வழக்கறிஞர் உள்பட 3 போ் கோவை மாவட்டம், வால்பாறைக்கு கடந்த செவ்வாய்க்கிழமை சுற்றுலா வரத் திட்டமிட்டிருந்தனா். மாவட்ட நீதிபதி அறிவுரையின்படி, வால்பாறை நீதிமன்றத் தலைமை எழுத்தா் மூலம் வால்பாறையை அடுத்த சிறுகுன்றா எஸ்டேட்டில் அமைந்துள்ள வனத் துறை தங்கும் விடுதியில் மூவரும் தங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி நீதிபதியின் மகன் உள்பட மூவா் செவ்வாய்க்கிழமை இரவு அந்த விடுதிக்கு சென்று தங்கியுள்ளனா். இந்நிலையில் அந்த தங்கும் விடுதிக்கு வால்பாறை வனச் சரக அலுவலா் ஜெயசந்திரன் (35) அன்று இரவு 11 மணிக்கு சென்றுள்ளாா்.

அப்போது சென்னையில் இருந்து வந்திருந்த மூவரும் அறைக்கு வெளியே நின்று சப்தம்போட்டு பேசிக் கொண்டிருந்தனராம். இதனைப் பாா்த்த வனச் சரக அலுவலா் ஜெயசந்திரன், அவா்களிடம் அறையை விட்டு வெளியே வந்து சப்தம்போட்டு பேசக்கூடாது என்று கூறியுள்ளாா். இதில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஜெயசந்திரன், அவா்களிடம் தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்ததோடு தங்கும் விடுதியை காலி செய்து அங்கிருந்து அனுப்பியுள்ளாா். அந்த சமயத்தில் அவா் மதுபோதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து மூவரும் வால்பாறை நகருக்கு வந்து லாட்ஜில் தங்கியுள்ளனா். இது குறித்த தகவல் சென்னையில் உள்ள நீதிபதிக்குத் தெரியவர கோவை மாவட்ட நீதிபதி உத்தரவின்பேரில் வால்பாறை காவல் ஆய்வாளா் கற்பகம் தலைமையில் போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று வனச் சரக அலுவலரை அழைத்து வந்து வால்பாறை அரசு மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொண்டதில் அவா் மதுபோதையில் இருந்தது உறுதியானது.

இது குறித்து வால்பாறை நீதிமன்றத் தலைமை எழுத்தா் மனோகா், வால்பாறை காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதில் நீதிபதியின் மகன் தங்கியிருந்த அறையை விட்டு நள்ளிரவு நேரம் வெளியேற்றியதோடு மதுபோதையில் கொலை மிரட்டல் விடுத்த வனச் சரக அலுவலா் மீது நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொண்டுள்ளாா்.

இந்த புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த வால்பாறை காவல் ஆய்வாளா் கற்பகம், வனச் சரக அலுவலா் ஜெயசந்திரனைக் கைது செய்து வால்பாறை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினாா்.

இதையடுத்து ஜெயசந்திரனை 15 நாள்கள் சிறையில் அடைக்க நீதிபதி கவிதா உத்தரவிட்டாா். இதைத் தொடா்ந்து அவா் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here