தமிழக முன்னாள் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ். பி. வேலுமணி வீடு மற்றும் அவரது சகோதரர் அன்பரசன் மற்றும் அவரது உறவினர்கள், நண்பர்கள் வீடுகள் அலுவலகங்கள் என 65 இடங்களில் கடந்த வாரம் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனைக்கு முன்பாக காண்ட்ராக்டர் திருவேங்கடம் என்பவர் சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார்.
இந்நிலையில் இன்று கோவை மாநகர போலீஸ் கமிஷனரிடம் அவர் மீது முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணியின் சகோதரர் அன்பரசன் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில் , ‘திருவேங்கடம் என்ற நபர் எனக்கு தெரிந்தவர் என்ற அடிப்படையில், மனைவியின் நகை சொத்து அனைத்தும் தொழிலுக்காக அடமானம் வைத்து நஷ்டம் அடைந்துவிட்டேன். ரூ.5 லட்சம் கடன் கொடுத்தால் நகைக்கு வட்டி கட்டி ஏலத்தை தவிர்த்து விடுவேன் என்று கூறி காலில் விழுந்து கெஞ்சினார். நான் தெரிந்த நண்பரிடம் கடனாக கேட்டதன் அடிப்படையில் சொந்த ஜாமீனில் திருவேங்கடத்திற்கு 5 லட்ச ரூபாயை கொடுத்தார்.
திடீரென பத்திரிக்கை நிருபர் ஒருவர், திருவேங்கடம் கூறியதாக ஒரு செய்தியை வெளியிடப் போவதாக என்னிடம் விளக்கம் கேட்டு வாட்ஸ்ஆப்பில் குறுஞ்செய்தி அனுப்பினார். அதற்கு நான் தக்க விளக்கம் கொடுத்தேன். ஆனால் அதையும் மீறி பொய்யான செய்திகளை என்மீது அவதூறு விளைவிக்கும் வகையில் பிரசுரம் செய்து விட்டனர். நிருபரின் குறுஞ்செய்தி வந்தபோது நான் திருவேங்கடத்தை தொடர்பு கொண்டு, ‘என்னப்பா இப்படி செய்தி யோடப்போவதாக குறுஞ்செய்தி வந்துள்ளதே!’ என்று கேட்டதற்கு, ’ரூ.1.50 கோடி கொடுத்தால் தடுத்து நிறுத்தி விடுகிறேன்’ என்று என்னிடம் கூறினார். நான் ’முடியாது’ என்று கூறி துண்டித்துவிட்டேன்.
பிரசுரம் வெளியான பின்பு மீண்டும் தொடர்பு கொண்டு ’சொன்னதை செய்து விட்டேன்’ என்று திருவேங்கடம் என்னிடம் தெரிவித்தார். மேலும், ‘ பணம் கொடுத்து விடு, இல்லையென்றால் உன்னையும் உன் தம்பியையும் மானத்தை வாங்கிவிடுவேன். எனக்கு கட்சியிலும் பலம் பெருகிவிடும்’ என்றும் கூறி மிரட்டினார்.
மேலும், ‘ இன்னும் இரண்டு நாளில் போலீஸ் கம்பளைண்ட் குடுக்க போறேன். அதுக்கப்புறமும் நீ பணம் தரலைன்னா இன்னும் எது வேணுனாலும் பண்ணுவேன்’ என்று மிரட்டுகிறார்.
இவருடைய பணத்தாசையால் என் உயிருக்கோ. என் குடும்பத்தாரோட உயிருக்கோ ஆபத்து வருமோ என்று அஞ்சுகிறேன். எனவே எனக்கு எனது குடும்பத்தாரின் பாதுகாப்பிற்காக காவல் பாதுகாப்பு வேண்டுகிறேன்.
மேலும் திருவேங்கடம் உண்மைக்கு புறம்பான அவநூறான செய்திகளை கொடுத்து அதன் உண்மை தன்மையை ஆராயாமல் என்னை பற்றி பொய்யான சங்கதிகளை வெளியிட்டுள்ளனர். இதை உண்மை என்று நம்பி என்னை பலரும் கேள்வி கேட்டது எனக்கு மிகுந்த மனவருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் என் மீது திட்டமிட்டு அவதூறு பரப்பிய நபர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று எஸ். பி. அன்பரசன் குறிப்பிட்டுள்ளார்.













