கோவை மாவட்டம் ஆனைமலை அருகே உள்ள தம்மம்பதி மலைவாழ் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (23) கூலித்தொழிலாளி. இவருக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு சேத்துமடை அண்ணாநகரைச் சேர்ந்த சரோஜினி (20) என்ற பெண்ணுடன் காதல் திருமணம் நடந்தது. இந்த தம்பதியினருக்கு 3 வயதில் நிவண்யாஸ்ரீ என்ற பெண் குழந்தை இருந்தது.
நேற்றுமுன்தினம் சரோஜினி தனது குழந்தையுடன் வீட்டில் இருந்தார். அப்போது குழந்தை நிவண்யாஸ்ரீ திடீரென மயங்கி விழுந்து விட்டதாகவும், ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல வேண்டும் எனவும் சரோஜினி தனது உறவினர்களிடம் தெரிவித்தார்.
இதை கேட்டதும் அதிர்ச்சியான அவர்கள் உடனடியாக குழந்தையை தூக்கி கொண்டு வேட்டைக்காரன்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து டாக்டர்கள் சம்பவம் குறித்து ஆனைமலை போலீசில் புகார் அளித்தனர்.
அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக மர்மச் சாவு என வழக்குப்பதிவு செய்து, குழந்தையின் பெற்றோரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது சரோஜினி முன்னுக்குப்பின் முரணாகவே பதில் அளித்தார். மேலும் போலீஸ் விசாரணைக்கு ஆஜராகாமல் டிமிக்கி கொடுத்தார் இதனால் அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் அதிகரித்தது. இதையடுத்து அவரின் நடவடிக்கைகளை உன்னிப்பாக போலீசார் கவனித்து வந்தனர்.
குழந்தையின் பிரேத பரிசோதனை அறிக்கையிலும் குழந்தையின் கழுத்து நெரிக்கப்பட்டு இருப்பதற்கான காயங்கள் இருந்துள்ளது. இதையடுத்து போலீசார் தங்களது விசாரணையை தீவிரப்படுத்தினர். போலீசாரின் விசாரணையில், சரோஜினியே பெற்ற மகளை கழுத்தை நெரித்து கொலை செய்த திடுக்கிடும் தகவல்தெரியவந்தது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு சரோஜினி தனது கணவனிடம் சண்டை போட்டுக் கொண்டு சேத்து மடையில் உள்ள அம்மா வீட்டிற்கு குழந்தையுடன் சென்று தங்கியிருந்தார். அங்கு கூலி வேலைக்கு போன இடத்தில் சரோஜினிக்கு பொம்மன் (வயது 24) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.
சரோஜினியின் கணவர் மணிகண்டன் தனது மனைவியை அழைத்துக்கொண்டு தம்மம்பதி வந்து குடும்பம் நடத்தினார். ஆனாலும் சரோஜினி தனது கள்ளக்காதலன் பொம்மனின் தொடர்பை விட்டுவிடாமல் செல்போனில் தனது காதலை வளர்த்துக் கொண்டார்.கணவர் வீட்டில் இல்லாத போது பொம்மனை தம்மம்பதிக்கு வரவழைத்து அவருடன் வீட்டில் உல்லாசமாக இருந்துள்ளார் . அந்த சமயத்தில் குழந்தை அழுததால் பொம்மனுக்கு ஆத்திரம் வந்துள்ளது. நமது சந்தோஷத்திற்கு இடையூறாக இருக்கும் இந்த குழந்தையை கொன்று விடு? என கள்ளக்காதலன் கூறியதால் சரோஜினி அதை ஏற்றுக்கொண்டு சம்பவத்த ன்று குழந்தையை கழுத்தை நெரித்து கொன்று விட்டார்.
உண்மை தெரிந்த போலீசார் தன்னை தேடுவதை அறிந்து ஆனைமலை கிராம நிர்வாக அலுவலர் சம்பத் குமாரிடம் ஆஜராகி உண்மையை கூறியதன் பேரில் அவர் சரோஜினியை ஆனைமலை போலீசில் ஒப்படைத்தார். போலீசார் சரோஜினி மற்றும் சேத்துமடை இருந்து தப்ப முயன்ற பொம்மனையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.